![]() |
சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!
|
January, 2012
உள்ளத்தோடு உள்ளம்
வாழ்ந்த வாழ்க்கை எந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதைத் தீர்மானிப்பது வருடங்கள் அல்ல செயல்கள் தான்.
அந்தச் செயல்களால் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மதிப்பு வாய்ந்ததாக உயாந்திருந்தால் அது வாழ்ந்த வாழ்க்கைக்கு நிச்சயம் அர்த்தத்தை தந்திருக்கும். ஆயுளின் எல்லையைத் தொடர வருடங்கள் போனால் சரி என்று வாழ்பவர்களுக்குப் புத்தாண்டு பழையாண்டு எல்லாமே ஒன்று போல்தான் இருந்திருக்கும்.
ஆண்டுக்கு ஆண்டு இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைந்து, தன்னை உயர்த்தியும், தன்னால் சமுதாய நிலையை உயர்த்தியும் வாழ்வது தான் ‘வாழ்க்கை’.
நாட்டில் பிரச்சனை, நாட்டில் பிரச்சனை என்கிறோம். அந்த நாட்டின் பிரச்சனை யாரால்? தனிமனிதன் ஒவ்வொருவரின் நடவடிக்கையால் தான். அந்த தனிமனிதன் தனக்குள் நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டாலே பிரச்சனை என்ற வார்த்தையே இல்லாமல் போகும்.
உலகளவில் நமக்கென இருக்கின்ற அடையாளத்தை மேல்நாட்டு மோகத்தால் நாம் தொலைத்து வருகிறோம். எதனால் நமக்கு சிறப்போ, அதற்கே “இறப்பு” உருவாக்குவது ஆரோக்கியமான வளர்ச்சியாகாது.
ஒருவரிடம் உள்ள பணம், மதிப்பு, மரியாதை, அறிவு இவை அனைத்தைக் காட்டிலும் தலைசிறந்தது நல்ல சுபாவமே. அந்த நல்ல சுபாவம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழட்டும். முல்லை எல்லை பிரச்சனை தீரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிரம்பட்டும்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
க. கலைச்செல்வி
ஆசிரியர்











