![]() |
Author: முனைவர் கடவூர் மணிமாறன்
|
எதுவும் என்னால் முடியும் என்கிற
எண்ணச் சிறகுகள் விரியட்டும்!
புதுமை நோக்கும் புரட்சிப் போக்கும்
பூத்திட மாற்றம் மலரட்டும்!
வானம் நமது எல்லை என்பது
வாழ்வின் இலக்காய் இருக்கட்டும்
போனதை எண்ணிப் புலம்பிட வேண்டா
புதிய சிந்தனை பிறக்கட்டும்!
எட்டும் தொலைவில் வெற்றியின் இமயம்
இருப்பதை நினைவில் இருத்திவிடு!
முட்டி மோதியே முடக்கிப் போட்டிடும்
மூடப் பழக்கம் துரத்திவிடு!
தடைகள் யாவும் தணலென வரினும்
தடந்தோள் காட்டித் தகர்த்து விடு!
நடையில் மிடுக்கும் நடத்தை ஒழுங்கும்
நமதென நாளும் உரைத்துவிடு!
ஊனம் சுமந்தால் உள்ளம் நொறுங்கும்
உண்மை பகைக்கும் உணர்ந்துவிடு!
மானம் பெருமை மனிதம் வளர்க்கும்
மாண்புகள் யாவும் அணிவகுக்கும்!
தோல்விகள் கண்டு துவண்டு விடாமல்
துணிந்தே பயணம் தொடந்திடுவாய்!
ஊழ்வினை விதியென உரைப்பர் சொற்கள்
உதவா தினியென உதறிடுவாய்!
- முனைவர் கடவூர் மணிமாறன்
- None Found






