![]() |
Author: ம.திருவள்ளுவர்
|
இது ஒரு முழுமையான பயிற்சித் தொடர். ஒரு எழுத்தாளர் என்பதைவிட ஒரு பயிற்சியாளன் என்கிற முறையிலேயே இந்தத் தொடரைக் கொண்டு செல்ல விழைகிறேன். ஒரு பேச்சாளனுக்கும், கவிஞனுக்கும், பயிற்சியாளனுக்குமான வேற்றுமைகள் பல என்றாலும், என்னைப் பொறுத்தவரை அவர்கள் அனைவருக்குள்ளும் ஒரு பொதுவான ஒற்றுமை இருக்க வேண்டும் அல்லது இருக்கும் என்பது உறுதியாக நம்புகிறேன் நான். இந்தப் பொறுப்புணர்வோடு வெளிப்படும் இந்தத் தொடர், உங்களுக்குள் கிடந்து உறுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வெளிப்படுத்த முடியாத அல்லது வெளிப்படுத்தத் தெரியாத பல்வேறு வினாக்களுக்குமான விடைகளை வழங்கி தெரிவிக்கும் என்னும் உறுதிமொழியையும் உங்களுக்கு வழங்குகிறேன்.
சரி, படிப்படியாக வெளிவரவிருக்கும் இந்த “எப்படி…எப்படி…எப்படி….”என்னும் தொடரை கடைப்பிடிக்கப் பழகினால் இது ஒரு வெற்றித் தொடராக அமையும் என்பதில் எனக்கு ஐயமேதும் இல்லை.. ஏனெனில் அனைவராலும் கடைப்பிடிக்கப்படக்கூடிய எளிய நடைமுறை அணுகுமுறையையே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவிருக்கிறேன்.
நண்பர்களே “எப்படி…எப்படி… எப்படி…” எனக் கேட்கத் தொடங்கிவிட்டால் இந்த உலகில் எதற்கெடுத்தாலும் அப்படிக் கேட்கத் தோன்றிவிடும் அல்லவா? இருந்தாலும் நமது வாழ்வுக்கு அத்தியாவசியமானவற்றுள் சிலவற்றை நமது தொடர் உள்ளடக்கி உங்களை வசீகரிக்கவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடுத்துக்கட்டாக சிலவற்றை இங்கே காண்போம். “எப்படி – எனத் தெரியாமல் நாம் தவிப்பது ஓரிண்டு விஷயங்களில் மட்டுமல்ல எண்ணற்ற விஷயங்களுக்கு இந்த “எப்படி” என்னும் கேள்வி பொருந்தும்.
அப்படிப் பார்த்தால் கீழ்க்கண்ட தொரு பட்டியலை நம் கவனத்தில் கொள்ளலாம் என்று நான் கருதுகிறேன். அதே வேளையில் நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.
அறிவது எப்படி? தெரிவது எப்படி? பார்ப்பது எப்படி? கேட்பது எப்படி? பேசுவது எப்படி? தேடுவது (முயல்வது) எப்படி முடிவெடுப்பது எப்படி< இலக்கைக் குறிப்பது எப்படி? கவனத்தைக் குவிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? ஆர்வத்தை அறிவது எப்படி? அச்சம் தவிர்ப்பது எப்படி? அர்ப்பணிப்பது எப்படி? தன்னம்பிக்கை வளர்ப்பது எப்படி? மன உறுதி பெறுவது எப்படி? சிந்திப்பது எப்படி? தொடங்குவது எப்படி? தொடர்வது எப்படி? சிக்கலைத் தீர்ப்பது எப்படி? தீர்வைக் காண்பது எப்படி? தலமை தாங்குவது எப்படி?
இப்படி இன்னும் பல “எப்படி”களையும் நாம் கருத்திக் எடுத்துக்கொண்டு நம் கவனத்தைக் குவிக்கலாம். இருந்தால் இவை மட்டுமே முடிந்த முடிவல்ல என்பதால் “எப்படி?” “எப்படி?” – எனத் தமிழகமெங்கும் வாழும் தன்னம்பிக்கை வாசகர்களை கேட்க விரும்பும் எவ்வித வினாக்களுக்குமான விடைகளைத் தேடவும் இந்தத் தொடர் தயாராயிருக்கிறது. எனவே வாசக அன்பர்களே, உங்கள் ஐயப்பாடுகளை தன்னம்பிக்கை அலவலகத்தில் தபால் மூலம் சேகரியுங்கள்.
இனி, இவ்விதழில் நாம் காணவிருப்பது தெளிவது எப்படி” என்பதே.
மனித வாழ்வின் தேவை என்ன? அல்லது மனித வாழ்இன் தேடல் எதை நோக்கி அமைகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் மகிழ்ச்சியைத்தான் என்பது உள்ளங்களை நெல்லிக்கனியென எல்லோருக்கும் விளங்கும். பணம், பதவி, புகழ், அந்தஸ்து எனப் பலரும் பலவிதமாக்க் கருதினாலும், அவை ஒவ்வொன்றின் மூலமு மனிதன் பெற்று நெகிழ்வது மகிழ்ச்சியைத்தான், இல்லையா?
அப்படிப்பட்ட “மகிழ்ச்சி” மனிதனுக்கு எப்போது கிடைக்கும் தெரியுமா? மனதில் நெளிவு ஏற்படும்போதுதான். குழம்பிய நிலையில் கலங்கிக் கிடக்கும் ஒரு குளத்தையும், தெளிந்த நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீரோடையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் – எது உங்களுக்குப் ப பிடிக்கும்?
தெளிந்த நீரோடை தானே, அப்படிப்பட்ட தெளிந்த நிலையில் மனம் இருக்கும்போது மனதில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும் அல்லவா? ஆகவே மனதில் மகிழ்ச்சி மலர வேண்டுமென்றால் மனம் தெளிவடைய வேண்டும். தெளிவுற்ற இந்த நிலையையே நம் முன்னோடிகளும் சித்தர்களும், ஞானிகளும் “ஞானம்” என்கிறார்கள். ஆங்கிலத்தில் “WISDOM’ என்கிறார்கள். அந்த நிலையை அடைந்து விட்டால் எந்த நேரத்திலும் மனம் குழப்பமடையாது; சலனமடையாது; தடுமாறாது; தடம் மாறாது.
அந்த நிலையை அடைவது நம் ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதானே! சரி, அந்த நிலையை அடைவது எப்படி எனப் பார்ப்போம்.
தெளிவை அடையும் பாதை – நான்கு படிகளால் ஆனது. முதற்படி அறிவது; இரண்டாம் படி புரிவது; மூன்றாம்படி உணர்வது; நான்காம் படி தெளிவது;
அதென்ன “அறிவது” என்கிறீர்களா? உலகில் அறிய வேண்டியவை ஒன்றா? இரண்டா? ஓராயிரம்! இல்லை, ஓர் இலட்சம்! இல்லை. இல்லை ஒரு கோடி… இல்லவே இல்லை; பிறகு எவ்வளவு என்கிறீர்களா? அதுதான் உலகளவு என்று சொல்லிவிட்டாரே அவ்வையாரே! அவ்வளவு விஷயங்கள் இருப்பதால் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியாவிட்டாலும், எது நமக்குத் தேவையோ அதைத்தேடி நாம் அறிய முயல வேண்டும். இதுதான் அறியாமையைப் போக்கும் ஒரே வழியாகும். பொதுவாக நாம் எது குறித்தாவது அறிந்துகொள்ள விரும்பினால் அதற்குப் புத்தகங்கள் உதவலாம்; விவாதங்கள் உதவலாம்; கருத்தரங்குகள் உதவலாம்; பத்திரிக்கைகள் போன்ற ஊடகங்கள் உதவலாம் மற்றும் கணிப்பொறி மூலம் இணையத் தளங்கள் உதவலாம்.
என்றாலும், நாம் அறிந்து கொள்ளத் தேவையானவை ஆர்வம். அந்த ஆர்வமானது அணையாத தீபம்போல, தணியாத தாகம்போல விசுவரூபம் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட தாகம் வந்துவிட்டால் தேடல் தானாகவே தொடங்கிவிடும். பிறகென்ன தீர்வின் திசையைக் கண்டுபிடித்து அதை நோக்கி நம்பிக்கையோடு கண்டுபிடித்து அதை நோக்கி நம்பிக்கையோடு நடைபோட வேண்டியதுதான். ஆகவே நண்பர்களே அறிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால் அறிந்துகொள்வது ஒன்றும் அரிய விஷயமல்ல. பார்த்தலின் மூலம்; கேட்டலின் மூலம்; பேசுவதின் மூலம்; கவனித்தலின்மூலம்… அவ்வளவு ஏன்? பிறரின் அனுபவங்களிலிருந்தும் கூட நாம் அறிந்துகொள்ள விரும்புவதை அறிந்துகொள்ள முடியும்.
-தொடரும்.






