கால்மிதிக்கும் கல்மாறிக்
கவின்சிலையாய்க் கோவிலுக்குள்
பால்முழுக்கு பெறும்போது
பக்தியிலே கரம்குவியும்!
சாம்பலாக இருந்தாலும்
சந்திதியில் தரும்போது
ஓம்மென்றே வாய்மணக்க
ஒளிவீசும் நெற்றிதனில்!
உளறல்தான் என்றாலும்
உதிர்க்கும்வாய் அமைச்சரென்றால்
தளர்வின்றி ஆணையாகித்
தலைகளெல்லாம் கீழ்படியும்!
வெறுங்கையின் விரல்கொண்டு
விளைவிக்கும் உழைப்பாலே
பெரும்புகழின் சாதனைகள்
பெயர்ந்துவரும் வாழ்வுதனில்!
நடுங்குகின்ற உள்ளத்தில்
நம்பிக்கை உரமிருந்தால்
தடுமாற்றமில்லாமல்
தாவிவரும் பெரும்வெற்றி!
உலகத்தின் கண்களுக்கு
உன்னைநீ காண்பித்தால்
உலகமுன்றன் இடம்தேடி
உயர்த்துதற்கே ஓடிவரும்!
- பாவலர்
கருமலைத் தமிழாழன்