என் இனிய நண்பர்களே! இத்தொடரில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் அத்தனை             இரகசியங்களும், ஆழ்ந்த உயிர் உணர்வின், ஆன்மசக்தியின் புரிந்து கொள்ளும் தன்மையால் உருவானவையாகும். கடந்த பதினெட்டு வருடங்களாக நோய் இன்றி வாழ்தலும், ஆங்கில மருந்துகள் (Chemicals) எதுவும் எடுத்துக் கொள்ளாமலும், இராசாயனங்களை உணவிலும் (Processed and Preserved foods) தவிர்த்து, கொசுவத்தி உள்ளிட்டவைகளை தவிர்த்து சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனங்கள் கலக்காமல் சுகமாய் வாழ்ந்து வரும் அனுபவத்தின் பலனாய் உங்களுக்கு பரிமாறப்படுகிறது. அறிவுபூர்வமாக உண்டு, உயிர் உணர்வுபூர்வமாக வாழுங்கள்.

நண்பர்களே! உடல் ஆரோக்கியம் என்பது உடல் வலிமை (structure), உடல் தூய்மை (உடல் கழிவு நீக்கம்) மற்றும் உயிர்திறன் (செயலாக்கம்) ஆகிய மூன்று அடிப்படை தன்மைகளை அடித்தளமாகக் கொண்டுள்ளது. உடல் வலிமை என்பது உடலின் கட்டுமானம் எவ்வளவு வலுவாக உள்ளது என்பதாகும். இந்த உடல் கட்டுமானம் என்பது உயிர்ப்புள்ள சத்து பொருட்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் நிலைப்படுத்த முடியும். உயிர்திறன் என்பது உயிர் சக்தியின் திணிவு (Specific gravity) மற்றும் தீவிரம் (efficiency) சார்ந்து இருப்பதாகும். உயிர்ப்புத் திறன் குறையாமல் இருக்க வேண்டுமாயின் உயிர்ப்புள்ள சத்துணவு களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் உயிர் தீவிரம் (Vitality) நிலைத்திருக்க உடல் தூய்மை காக்கப்பட வேண்டும்.

உடல் தூய்மை என்பது புறந்தூய்மை யாகக் கருதுவதை விட உடல் உள்தூய்மையே மிக முக்கியம். நமது அன்றாட வாழ்க்கை செயல்களால் உடலில் கழிவுகள் தேங்கா வண்ணம் வாழ்ந்தாலே உடல் வலிமையுடனும் உயிர்ப்புடனும் இருக்கும். நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதி ஆற்றலாக மாற்றப்பட, மீதிப் பகுதி கழிவாக வெளியேற்றப்பட்டு வாழ்கிறோம். நமது உணவில் ஆற்றலாக மாற்றப்படும் பகுதி அதிகமாகவும், கழிவாக மாற்றப்படும் பகுதி குறைவாகவும் இருந்தால், உடல் நலம் சிறக்கும். ஆற்றல் குறைவாகவும், கழிவு மிகுதியாகவும் இருக்கும் போது உடலில் கழிவு தேங்கிவிடுகிறது.

நண்பர்களே! இந்த பூலோகத்தில் நுண்கிருமிகள், கழிவுகளை மக்கச் செய்வதன் (Decompose) மூலம்தான் ஆற்றல் கிடைக்கப் பெற்று வாழ்கின்றன. இவ்வாறு கழிவுகள் ஆற்றலாக மாற்றம் பெற காற்றும் நீரும் அவசியமாகத் தேவைப்படுகின்றது. ஆக கழிவும் (waste), காற்றும் நீரும் தேங்கி இருக்கும் இடங்களில்தான் கிருமிகள் உயிர் வாழ்கின்றன. அதுபோலவே, நம் உடலிலும், கழிவுகள் தேங்கினால் மட்டுமே கிருமிகள் உள் வருகின்றன. நம் உடலில் நீரும் காற்றும் ஏற்கனவே இருப்பதால், கழிவு சேர்ந்த உடன் கிருமிகளுக்கு கொண்டாட்டம்தான். நம் பாடு திண்டாட்டம் தான். ஆக, நம் உடலில் தேங்கியுள்ள அசுத்தங்களை நீக்கினாலே நோய் கிருமிகள் நம்மை அண்டாது. நோய் கிருமிகள் நம்மை தின்று அழிக்க வருவதில்லை. நம்முள்ளே உள்ள அழுக்கைத் திண்ணவே வருகின்றன. அப்படி தின்று அவை வெளியிடும் கழிவுகளே நோய் பதிவாக உருவாகின்றன. இந்த புதிய கழிவுகளைத் தின்ன புதிய விதமான கிருமிகள் வரத்தான் செய்யும். ஆக உடல் கழிவுகளை நீக்காத வரை ஒன்றன்பின் ஒன்றாக கிருமிகளுக்கு ஆட்பட்டு, நோய்வாய்ப்பட்டு, நொந்து போகிறோம். நாம் அடிப்படையில் சரியாக இல்லாததால்தான் நோய் தன்மைகளுக்கு ஆளாகிறோம். அன்று சேறும் கழிவுகளை அன்றே நீக்கிவிட்டால் நோய்க்கு நோ சொல்ல (No entry) முடியும்.

அறிவிலும், உயர் தன்மையிலும் சிறந்து விளங்கும் அன்பர்களே! உடல் கழிவுகளை நீக்காமல், அல்லது நீக்க வழி தெரியாமல் நோய் கிருமிகளைக் கொல்லும் நோய்க் கிருமிகளை (Antibiotics) நாம் உட்கொள்வதன் மூலம், தற்காலிகமாக நோய் கிருமிகளைக் கொல்கிறோம். இதன் மூலம் மூன்று மகா பாவங்களை செய்கிறோம்.

1.    நமக்குள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி (உயிர்ச் சக்தியின் மற்றொரு வெளிப் பாடு)யை அழிக்கின்றோம்.

2.    கிருமிகளைக் கொல்வதோடு நம் உயிர் அணுக்களையும் (Cells) பாதிப்படைய செய்கிறோம்.

3.    நம் உடலில் வேதி விஷங்களை சேர்த்து மேலும் அசுத்தப்படுத்துகிறோம்.

இந்த மூன்று செயல்களில், மூன்றாவது செயல்தான் மிக மோசமானது. உடல் அழிவு நிலையால் தான் கிருமிகள் நம் உள்ளே அடைக்கலம் ஆயின. அதைக் கொல்ல மேலும் அசுத்தப்படுத்தும் இரசாயனங்களை பயன் படுத்துகிறோம். புதிய குப்பைக்கு புதிய கிருமிகள் வந்து சேர்கின்றன. ஒன்றை நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள். கிருமிகளை உள்ளே கொன்றாலும், உடலின் வெளியே காற்றிலும், நீரிலும் கிருமிகள் இருக்கத்தான் செய்யும் (குறைஅளவில்). நீங்கள் நீரை வேண்டுமானால் சுட வைத்து அருந்துவீர்கள். ஆனால் காற்றை சுட வைக்க முடியுமா? சிலர் எப்பொழுதும் ஏசியில் இருப்பார்கள். அவர்கள் வேலை செய்வது ஏசி, வீட்டில் ஏசி மற்றும் காரில் ஏசி இருக்கும் ஆனால் அவரால் வெளி காற்றில் சுகமாக இருக்க முடியாது. ஆக அவரும் ஒரு சிறை கைதிதான். உயிர் அற்றநீரால், காற்றால், உயிரற்று தான் வாழ வேண்டி இருக்கும்.

அன்பர்களே! உடல் ஆரோக்கியத்தின் மூன்று அடிப்படைகளில் ஒன்றான உடலினை உறுதி செய்யும் விதம் பற்றி வரும் இதழ்களில் பார்ப்போம்.

செயல்முறை

உடல்கழிவு வெளியேற உண்ணாவிரதம் இருக்கலாம். மாதத்தில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருப்பது நல்லது. அப்படியில்லாவிட்டால் வாரம் ஒருவேளை விரதம் இருக்கலாம் (இரவு வேளை). உண்ணா விரதத்தின் போது நமது செரிமான சக்தியானது உடல் கழிவு வெளியேற்ற பயன்படுகிறது. உண்ணாவிரதம் இருக்கும்போது உடல் உழைப்பு குறைவாகவும், தாகம் எடுக்கும்போது தண்ணீர் (வெண்ணீர் அல்ல) எடுத்துக் கொள்ள வேண்டும். மனம் சலனமற்று இருக்க வேண்டும். விரதம் முடிக்கும் போது பழச்சாறு சாப்பிட வேண்டும். பிறகு எளிதில் செறிக்கக்கூடிய ஓட்ஸ் அல்லது கேழ்வரகு அல்லது கம்பு கூழ் குடிக்கலாம்.

உடல் நலம் காப்போம்!

உன்னதமாய் வாழ்வோம்!!

- இரகசியங்கள் தொடரும்

ஆசிரியர் தொடர்புக்கு : 98422 56581