ஒவ்வொரு காலக்கட்டத்திலும், ஒவ்வொரு விதமாக தொலைத்தொடர்பு மக்களிடையே நடைபெற்று வருகிறது. இத்தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இத்தகைய தொடர்புகளால் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு தங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் பரிமாறிக் கொள்ள முடிகிறது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஒவ்வொரு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றம் இந்த தொடர்புகளைச் சார்ந்தே உள்ளதென்றால் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மானுட வாழ்வில் தொலைத் தொடர்பின் பங்கு

தொலைத் தொடர்பு என்பது வெவ்வேறு பகுதிகளில் வாழும் மனித இனத்தை ஒரு சேர ஒரே இனமாக இணைக்கிறது. மேலும் அவர்களின் கருத்து பரிமாற்றமும், கலாச்சார மற்றும் பண்பாடும் பரிமாறிக் கொள்வதற்கு முக்கிய ஆதாரம் இந்த தொலைத்தொடர்பு தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

எத்தனையோ, வடிவங்களில் தொலைதொடர்பு சாதனங்கள் இருப்பினும் அவற்றின் ஒரு சில சாதனங்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களிடமும் முக்கிய இடம் வகிக்கிறது. சில முக்கியத்துவம் வாய்ந்த தொலைத்தொடர்பு சாதனங்கள், தொலைக்காட்சி, தொலைபேசி, செய்தித்தாள்கள், வார மற்றும் மாத இதழ்கள் மற்றும் இன்டர்நெட் என்பவைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

இவற்றின் முக்கிய பங்கு என்னவென்றால் சமுதாய மக்களை ஒருங்கிணைப்பது. மேலும் வளர்ந்த மற்றும் வளரும் இளைஞர்களின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் இவைகள் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.

தொலைக்காட்சி (அ) தொல்லைக்காட்சி

“ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்” என்று நமது சினிமாவில் ஒரு பாடல் உண்டு. ஆனால் அதுமட்டுமே சுகமல்ல. அது ஒரு மன ஆறுதல் தான். ஆனால் இன்று தொலைக்காட்சிகள் அனைத்துமே அதைமட்டுமே முதன் மொழியாகக் கொண்டு செயல்படுகிறது என்பது தான் மிகப் பெரிய அவலநிலை. எனக்குத் தெரிந்து நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டே சேனல்கள் தான் பிரபலமாகத் திகழ்ந்தன. ஒன்று பொதிகை மற்றொன்று தூர்தர்ஷன். இவ்விரு சேனல்களும் துல்லியமான தரமான செய்திகளையும் மக்களை நெறிப்படுத்தும் நல்ல சில புராணங்களையும், பொழுதுபோக்கிற்காக குறைவான படங்களை யும் ஒளிபரப்பி வந்தன.

ஆனால் இன்று தொலைக்காட்சி சேனல்கள் பெருகிவிட்டன. ஆனால் அத்துறை தனது கடமையை மறந்து சுயநலமான தனிமனித முன்னேற்றத்திற்காக தாறுமாறாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் 1000 முறை அறிவுரைக் கூறினால் 100 முறை மற்ற ஊடகங்களில் விளம்பரம் செய்தாலும் 1 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதற்கு நிகரில்லை என்பது நமது மக்களின் அறியாமையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இந்த அளவுக்குத் திறன் வாய்ந்த இந்த டி.வியும் சினிமாவும் தங்கள் கடமைகளை சரிவர செய்கின்றனவா? இல்லை.

“பசுமரத்தாணி போல” என்னும் இம்முதுமொழியை நாம் எதற்காக பயன் படுத்துகிறோம். இளம் குழந்தைகளுக்குத் தானே. இன்றைய நவீன சூழ்நிலையில் ஒரு குழந்தை தனது வீடுகளில் எழுந்தது முதல் மீண்டும் தூங்கும் வரை அவர்கள் கண் முன் படுவது டி.வி. தான். ஆனால் இந்த டி.வி.களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அவர்கள் பார்க்கும் அளவிற்கு தரமானதாக உள்ளதா?

அரைகுறைஆடையில் ஆடலும், பாடலும், கூச்சலும், குழப்பமும் நிறைந்த சண்டைக் காட்சிகள். மற்றும் அழுகை நிறைந்த தொடர்கதைகள் மட்டும் தானே! மேலும் அதனையும் மீறி செய்திகள் ஒளிபரப்பப்பட்டால் பாதி நேரம் விளம்பரம் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இளம் சிறார்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களின் பிரிவிற்கு தனி ஆடல், பாடல், அச்சிறு பிஞ்சுகளுக்கும் அரைகுறைஉடை, மேலும் அதற்கு உடையமைப்பு இன்னும் சற்று மாற்றம் பெற்றால் சிறப்பாக இருக்கும், இன்னும் கொஞ்சம் ‘ப்பீளிங்’ உடன் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று விமர்சிக்க வயதும்; அனுபவமும் நிறைந்த நடுவர்களாம்! அதுவும் அச்சிறு குழந்தைகள் ஆட தேர்ந்தெடுக்கும் பாடல்களும் காதல் பாடல்கள்! என்ன கொடுமை! இதைப் பார்க்கும் நம் குழந்தைகளும் அதேபோல் ஆட வேண்டும், பாட வேண்டும், உடை உடுத்த வேண்டும் என்றும் அடம் பிடிக்கின்றனர். இது யார் குற்றம்?

நடனமும், பாடலும் ஒரு சிறந்த கலைகள் தான் இருப்பினும் நாம் தொலைக்காட்சியில் பார்க்கும் இந்த காட்சிகள் நடனத்தையும், பாடல் கலையையும் முற்றிலும் அவமதிக்கும் விதத்தில் அல்லவா உள்ளன.

ஒரு காலத்தில் “வினாடி வினா” என்ற ஒரு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் இன்று பெருகிய இந்த தொலைக்காட்சி சேனல்களின் வரிசையில் எத்தனை சேனல்கள் இதுபோன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன.

“இளம் கன்று பயம் அறியாது”

இத்தகைய இளைஞர்களின், சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் அரை மணி நேரம் செலவிட முடியாத இத்தகைய தொலைக்காட்சி சேனல்கள் எப்படி இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்தாக அமைய முடியும்?

தொலைக்காட்சி தொடர்களால் தொலையும் பண்பாடும் கலாச்சாரமும்:

“ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை”

“பாருக்குள்ளே நல்ல நாடு நம்ம பாரத நாடு”

என்பன போன்ற புகழ் மொழிகளை நாம் கேட்டிருக்கிறோம். இதற்கு காரணம் என்ன? அன்பும் அரவணைப்பும் நிறைந்த நமது கலாச்சாரம் தான் என்றால் அது மிகையாகாது.

ஒரு நாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது தொலைக்காட்சிகள். ஆனால் உண்மையில் இவைகள் தற்பொழுது நமது பண்பாட்டை காக்கின்றனவா?

நமது நாட்டின் கொள்கை என்ன? (கலாச்சாரத்தில்)

“ஒருவனுக்கு ஒருத்தி” என்பது தானே!

ஆனால் இன்று ஒளிபரப்பப்படும் தொடர் கதைகளின் நிலை என்ன? ஒரு பெண்ணுக்கு மூன்று திருமணம். திருமணம் ஆனவுடன் சிறிது நாட்களிலேயே விவாகரத்து! ஒரு பெண் யாருடன் ஊர் சுற்றினாலும் கவலையில்லை!

இதுபோன்ற நிலைகளை தானே தினம் தினம் இச்சமூகத்திற்கு தொலைக்காட்சி சேனல்கள் தந்து கொண்டிருக்கின்றன.

இதைக் காணும் இளம் பெண்களின் நிலை என்ன? அவர்கள் மனதில் ஓ! இதுவெல்லாம் தவறில்லை என்று தானே தோன்றும்.

அறிந்தும் அறியாததும்

என்ன இது? ஒரு குழப்பமான துணை தலைப்பு” என்று நினைக்கத் தோன்றுகிறதா?

நாம் ஒவ்வொரு முறையும் பிறருடன் உரையாடும் போது கல்வி அறிவின்மையும், அறியாமையும் தான்! பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கு காரணம் என்று கூறுவதுண்டு. இதில் உண்மை இருக்கிறதா?

ஏதோ! உழைத்து அலுத்த படிப்பறிவற்ற கிராமமக்கள் தொலைக்காட்சியில் வரும் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது அறியாமைதான்.

ஆனால் படித்து பட்டம் பெற்று கல்வியறிவுடன், அலுவலகங்களில் வேலை பார்க்கும் குடும்பத் தலைவிகளும் இத்தகைய சீர்கேடு நிறைந்த தொடர்களைப் பார்த்து ரசிப்பது வருத்தப்படவேண்டிய விஷயம் அல்லவா?

இவர்கள் கற்ற கல்வியின் நிலை என்ன? சமுதாயத்தின் சீர்கேட்டை பிரித்து பார்க்க முடியாத இவர்கள் தங்கள் குழந்தைகளை எங்ஙனம் சிறப்பாக வளர்க்க முடியும். சிறப்பான இளைஞர் சமுதாயம் உருவாகாமல் இந்தியா எப்படி வல்லரசாகும்?

பெற்றோர்களின் நிலை?

இன்றைய கால கட்டத்தில் 80% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும், உயர்ந்த வேலைக்குச் செல்ல வேண்டும். பிறர் புகழ வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதில் எத்தனை சதவீதம் பேர் அதற்கான வாய்ப்புகளையும், சுற்றுச் சூழலையும் உருவாக்கித் தருகின்றனர்.

வெறும் 20% தான். மீதமுள்ள 20 சதவீதம் பேர் சொல்வதோடு, நினைப்பதோடு சரி, மீறினால் “ரேங் கார்டு” தரும் நேரத்தில் இரண்டு நாள் போட்டு அடித்து உதைத்து விட்டு, இரண்டு நாட்கள் உட்கார்ந்து படிக்கச் சொல்வார்கள். அடுத்த நாள். அந்த குழந்தை படிக்கும் அதே நேரத்தில் டிவியைப் போட்டு குடும்பத்தோடு பார்ப்பார்கள். 30 வயது, 40 வயது கடந்த பெற்றோர்களே தங்களை கட்டுப்படுத்தி டி.வி.. தொடர்களை பார்ப்பதை நிறுத்திக் கொள்ளாத போது வெறும் 10 வயது, 15 வயது குழந்தைகள் தங்களைக் கட்டுப்படுத்துவது எவ்வகையில் சாத்தியமாகும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்தால் சிறப்பான ஒரு மாற்றத்தை இளைய தலைமுறையினரிடம் கொண்டு வர முடியும்.

பெற்றோர்களின் கடமை

“திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”

அதுபோல பெற்றோர்களின் ஆதரவு இல்லாத வரை இதுபோன்ற நெறி கெட்ட ஊடகங்களை ஒழிக்க முடியாது. மேலும் தரமான, ஊடகத் துறையையும், தரமான மாணவ சமுதாயத்தையும் உருவாக்கிட அனைத்து பெற்றோர்களும் ஆதரவு தந்தால் வளமான ஒரு எதிர்காலத்தையும் உருவாக்கிட அனைவரும் முனைந்து பாடுபட்டால் ஒரு மாற்றம் காண முடியும்.

ஊடகங்களின் கடமை

ஊடகங்கள் தங்களின் லாப நோக்கத்திற் காக மட்டுமல்லாமல் மக்களின் நலன் கருதியும் செயல்பட்டால் ஒரு சிறப்பான எதிர்காலம் நமக்கும் நமது தேசத்திற்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.

சிறுவர்களின் கவனம்

சிதைக்கும் செல்போன்கள்

மற்றொரு சிறந்த தொலை தொடர்பு சாதனம் கைபேசி. செல்போன் பயன்படுத்து வதில் நமது நாடு உலகளவில் இரண்டாம் இடம் வகிக்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. செல்போன் தொழில்நுட்பம் பட்டி தொட்டியெல்லாம் பரவியுள்ளது என்பதை உற்று நோக்கும் பொழுது இது ஒரு மிகப்பெரும் சாதனைதான்.

ஆனால் செல்போனில் இருந்து “மின்காந்த கதிர்கள்” வெளிப்படுகின்றன. இவை நமது உடல் உறுப்புகளை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பு மக்களும் உணர்ந்து கொள்வதில்லை. செல்போன் பயன்படுத்தக் கூடாதென்பது, நமது கருத்து அல்ல. ஆனால் அதனை பயன்படுத்து வதை குறைத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக இருதயம் பாதிப்படைந்தோர், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் முதலானோர் இதனை அறவே பயன்படுத்தக் கூடாது என்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தை களிடம் தங்களது செல்போன்களை விளையாடு வதற்காக கொடுக்கின்றனர். அவைகள் விளை யாட்டு பொருட்கள் அல்ல! விஷ கிருமிகள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும். பச்சிளம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியையும், உடல் உறுப்புகளின் செயல்பாட்டையும் பாதிக்கும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு முன் செல்போன் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும்.

நல்லதை நினைப்போம்! நல்லதையே செய்வோம்! என்று கூறும் நமது வழிகாட்டியான பெற்றோர்களும், செய்தி ஒளிபரப்பு ஊடகங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் இன்றைய இளைஞர் சமுதாயத்தை செம்மைப் படுத்திட, தரமான அறிவுரைகளையும், தன்னம்பிக்கையையும் வளர்த்திடும் வகையில் அவர்களின் சிந்தனையையும் செம்மைப் படுத்திடும் வகையில் மாற்றியமைத்தால் நிச்சயம் நாம் வெகு விரையில் “கலாம்” கண்ட கனவான “இந்தியா வல்லரசு” என்ற எண்ணம் விரைவில் கைகூடும். இளம் தூண்களின் வளம் காக்கப்பட்டால் நிச்சயம் நாம் நமது இலக்கினை எட்டி விடலாம். அன்றி தற்பொழுது நிலவிவரும் இதே சூழல் தொடர்ந்தால், மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய தொலைத் தொடர்பு சாதனங்கள் ஒரு தொல்லைத் தொடர்பு சாதனங்களாக மட்டுமே இருக்கும். இத்தகைய கொள்கைகளால் ஒரு சில தனி மனிதர்கள் வேண்டுமானால் வளம் பெறலாம். ஆனால் ஒட்டு மொத்த சமுதாயமும் வளம் பெறுவதென்பது கேள்விக்குறிதான். இதனை அனைத்து தரப்பினரும் சிந்தித்து நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வருவோமாக!