![]() |
Author: M. நம்பிராஜன்
|
முன்னோடி உழவர், காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நிறுவனத் தலைவர்
த. பெருமாள்சாமி
சூரிய ஒளியே ஆயினும் அதன் ஒளிக்கற்றைகளை ஒருங்கு திரட்டி குவியாடியில் மையப்படுத்தும் போதே எரிவதற்குத் தேவையான உஷ்ணத்தைப் பெறமுடியும். சிந்தித்து யோசனைகளைப் பெறுவது அனைவரும் செய்யக்கூடியதே. உருவாக்கிய யோசனைகளை வெற்றி பெறச் செய்ய ‘வெற்றிக்குணங்கள்’ தேவைப்படுகிறது. வெற்றிக் குணங்கள் என்பவை திடீரென கிடைத்து விடுபவை அல்ல. அனுபவத்தாலும், அவ்வனுபவம் கொடுத்த பாடங்களை இடைவிடாது வாழ்வில் கடைபிடிப்பதாலுமே கிடைக்கப் பெறுகிறது. கிடைக்கப் பெற்ற வெற்றிக் குணங்களை யோசனைகளின் மேல் குவியாடி போல் மையப்படுத்தி செயலாற்றும் போதே வெற்றி வேறு வழியில்லாமல் செயல்புரியும் மனிதரைத் தேடி வருகிறது.
பெரும் நிலக்கிழாராகவும், காமதேனு நிதி நிறுவனம், காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காமதேனு அரிசி ஆலை போன்ற வற்றிற்கு உரிமையாளராகவும், தன்னை நாடி வருபவர்களை உயர்த்துபவராகவும், சிறு வயது முதலே நாணயத்தைக் கடைபிடித்து வந்து இன்று ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தூக்கநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அனைவரிடத்திலும் ‘நேர்மை யான மனிதர்’ என்ற நற்பெயரை சம்பாதித்தும் உள்ளவர் வெற்றிக் குணங்கள் நிறைந்த உழவர் திரு. த. பெருமாள்சாமி அவர்கள்.
ஒன்றேகால் ஏக்கர் பூமியில் விவசாயம் செய்து வந்த ஏழை விவசாயி திரு. ராக்கியாக் கவுண்டர், திருமதி. குழந்தையம்மாள் ஆகிய தம்பதியருக்கு 26.11.1944 அன்று பிறந்தவர் இவர். உடன் பிறந்தோர் இரு மூத்த சகோதரர்கள். இவரை குடும்ப சூழல் காரணமாக பெற்றோர் விவசாயத் தொழிலில் ஈடுபடுத்தியதால் இவரால் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்க முடிந்தது. சிறுவன் பெருமாள்சாமி விவசாயத்தில் அனைத்து வேலைகளையும் கற்று நிபுணத்துவம் அடைந்தார். சங்கராயம்மாள் அவர்களை மண முடித்ததும் தொழிலில் அதிக கவனம் செலுத்தினார்.
தொழிலில் புதுமைகளைப் புரிதல், வயதில் மூத்தோரிடம் நட்புக்கொண்டு அவர்களின் அனுபவத்தைக் கேட்டறிதல். எத்திட்டத்திலும் செலவை சிக்கனப்படுத்துதல், கடுமையாக உழைத்தல், எச்சூழலுக்கும் தயார் நிலையில் இருத்தல் போன்ற வெற்றிக் குணங்களைத் தன்னிடத்தில் வளர்த்துக் கொண்டிருந்தார் பெருமாள்சாமி. 1968ஆம் ஆண்டு மஞ்சள் பயிரிடையே ஊடுபயிர் பயிரிட்டால் மகசூல் குறையும் என்றிருந்த நிலையை மாற்றி, மஞ்சளின் ஊடே வெங்காயம், மிளகாய் பயிர்களை விளைவித்து மஞ்சள் மகசூலையும், குறை வில்லாமல் எடுத்து கூடுதல் வருவாயாக ஊடுபயிர் வருமானத்தை அடைந்து காட்டி சக விவசாயிகளின் பாராட்டுதலைப் பெற்று அவர்களையும், ஊடுபயிர் திட்டத்தைக் கடைப்பிடிக்கச் செய்தார் இவர்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் தாயாரும், சகுந்தலாதேவி என்ற பெண் குழந்தையைப் பெற்று இவரிடம் கொடுத்து விட்டு இவர் துணைவியாரும் அடுத்தடுத்து காலமாகவும், எதிர்பாராத இழப்புகளை கரும்பு, நெல் பயிர்கள் உண்டாக்கவும் வாழ்வில் பேரிடி களைப் பெற்றார் பெருமாள்சாமி. இக்கால கட்டத்தில் இவரின் சொத்து மதிப்பு ரூ. 75 ஆயிரம் என்றிருக்க, கடனும் ரூ. 75 ஆயிரம் என்றாக பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்து விட்டார். வெற்றிக் குணங்களைத் தன் வசம் வைத்திருந்த பெருமாள்சாமி அவை கொடுத்த தன்னம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு மனந்தளராமல் போராடி தன் கடன்களை அடைத்து வெற்றிகரமாக மீண்டார். முதல் மனைவி இறந்ததால், இவர் தந்தையார் இவருக்கு ஜானகி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். கடனை அடைத்த தெம்பை அடைந்ததும் பெருமாள்சாமி வழக்கம் போல் இலக்கைத் தீர்மானிக்கத் தொடங்கி விட்டார். இம்முறை வாழைக்குள் வெங்காயத்தை ஊடுபயிராகக் கொண்டு கார் வாங்கி கோவைக்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற ஆசை. எண்ணியவாறே ஊடுபயிரைக் கொண்டு இவ்விலக்கையும் 1972 ஆம் ஆண்டு அடைந்து அசத்தினார் ஊர் மக்களை.
புத்திக்கூர்மை படைத்த பெருமாள்சாமி மேலும் எதில் சம்பாதிக்க முடியும் என இடை விடாது யோசித்து வந்தார். ஆற்றோர வயல் களை வாங்குவதில் கவனத்தைத் திருப்பினார். தொலைதூரத்தில் இருக்கும் ஆற்றோர வயல்களுக்கு சாலை வசதி சரிவர இல்லாததால், விளைச்சலை தலைச்சுமையாக சுமந்து வந்து வண்டிகளில் ஏற்றவேண்டியிருக்கும் என்பதால் விலை மலிவாகவே இவ்வயல்கள் இருக்கும். இவற்றைவாங்கி, சாலை வசதிகளை சொந்த செலவில் இவரே ஏற்படுத்தி, மண்வளமும், நீர்வளமும் மிகுந்த ஆற்றோர வயல்களில் அதிக மகசூல் எடுத்து சம்பாதிக்கத் தொடங்கி விட்டார். எனவே, இவர் ஓரிடத்தில் பூமி வாங்குகிறார் என்றால் அப்பகுதி விவசாயிகள் பெருமாள்சாமி வந்துவிட்டார்; இனி நமக்கு சாலை வசதி, தண்ணீர் வசதிக்கு கவலையில்லை; நமது பூமியின் விலையும் ஏறிவிடும் என மகிழ்ச்சியடைவர். 1968 ஆம் ஆண்டு வரை கிணற்றுப் பாசனம் மூலம் தோட்டத்தில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த கரும்பு, வாழை, மஞ்சள், சேனைக்கிழங்கு பயிர்களை வாய்க்கால் பாசனம் பாயும் வயல்களில் பயிரிட்டு ஆற்று நீரின் வளம், வயல் மண்ணின் வளம் போன்றசிறப்புக்களைக் கொண்டு தோட்டத்தில் கிடைத்த மகசூலை விட அதிக மகசூல் பெற்று விவசாயத்தில் புதுமையைப் படைத்தார்.
1976 ஆம் ஆண்டு உழவு ஓட்ட பயன்படுத்தும் எருதுகளுக்கு ஏற்பட்ட கால்புண், தொற்றுநோய் காரணமாக பரவலாக இப்பகுதி எருதுகளை உழவுக்கு பயன்படுத்த முடியாத நிலை உண்டானது. இதற்கு மாற்றாக பவர் டில்லர்களை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பெங்களூர் சென்று பழைய பவர் டில்லர்களை வாங்கி, சீர்படுத்தி ஒவ்வொரு டில்லராக மொத்தம் 300 டில்லர்களை 300 கூலித் தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்து, விவசாயிகளுக்கு எருதுகளுக்கு மாற்றாக பவர் டில்லர் மூலம் தொழிலைத் தொடரவும் உதவினார். மேலும், இக்கூலித் தொழிலாளர்கள் 300 பேருக்கு இதன் மூலம் சுய தொழில் வாய்ப்பைக் கொடுத்து அவர்களை இன்று உயர்த்தியுள்ளார். அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனம் மூலம் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்காது என்பதால் வயலில் கிணறு தோண்டி, 1980 ஆம் ஆண்டு முதன் முதலில் வயலுக்கு மின்சாரம் பெற்று, கிணற்றுப் பாசனம் மூலம், வாய்க்கால் பாசனம் கிடைக்காத காலங்களில் வருடப் பயிர்களான வாழை, மஞ்சள், கரும்பு போன்றவற்றிற்கு நீர் பாசனம் செய்து அதிக மகசூல் எடுத்தவர் என்ற சிறப்பிற்குரியவர் இவர்.
எப்போதும் தனது பாக்கெட்டில் பத்தா யிரம் ரூபாயை தயார் நிலையில் வைத்திருந்து எந்தப் பொருள் மலிவாகக் கிடைத்தாலும் அதை வாங்கி விடுவார். கோவைக்கு ஒரு வேலையாகச் செல்லாமல் நான்கைந்து வேலைகளை ஏற்படுத்திக் கொண்டு ஒரே முறையில் சென்று முடித்து விட்டு நேரத்தை மிச்சப்படுத்தி, நேர மகத்துவத்தையும் அறிந்து வைத்துள்ளார். இந்த படிக்காத, பட்டறிவு மனிதர்.
கனவுகள் நிறைந்த உழவர் திரு. பெருமாள் சாமி வட இந்தியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டவர். சத்தியமங்கலம், கோபி வட்டாரங்களில் ‘முன்னோடி உழவர்’ என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் திரு. பெருமாள்சாமி.
பெருமாள்சாமி அவர்களுக்கு மலர்செல்வி, சுதா, நித்யா, ஆர்த்தி, அருந்ததி, கிருத்திகா என ஏழு பெண் குழந்தைகள் உள்ளனர்.
2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கல்வி எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து, தன் ஊர் மக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்பி ஒரு கல்லூரி கட்டத் தீர்மானித்தார். எதையும் உடனே செயல்படுத்தும் குணம் கொண்ட இவர் 2000 ஆம் ஆண்டே சத்தியமங்கலத்தில் ‘காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ என்ற ஆண், பெண் இரு பாலரும் பயிலும் கல்லூரியை 160 மாணவ, மாணவியருடன் நிறுவினார். தற்சமயம் 1150 மாணவ, மாணவியருடன் வேறூன்றி நிற்கிறது இக்கல்லூரி.
கல்வி மேல் கொண்ட தாக்கத்தின் காரண மாக, சமூக நோக்கத்தோடு பனிரெண்டாம் வகுப்பில் 1100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கும், விளையாட்டுத் துறையில் மாநில, மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் முற்றிலும் இலவசமாக கல்லூரிக் கல்வியை இங்கு வழங்குகிறார் திரு. பெருமாள்சாமி. கல்லூரியைச் சுற்றி 50 கி.மீ. சுற்று வட்டாரத்திற்கு, தினமும் மாணவ, மாணவியரை அழைத்து வந்து, மீண்டும் கொண்டு விட பேருந்துகள் வசதியும், தங்கி பயில இரு பாலருக்கும் தனித்தனியே விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரி ஐநஞ 9001:2008 தரச் சான்று பெற்றுத் திகழ்கிறது. இக் கல்லூரியை மேலும் முன்னேற்றுவதையே இனி தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளார் பெருமாள்சாமி அவர்கள். கல்லூரியின் நிறுவனத் தலைவராக திரு. த. பெருமாள்சாமி அவர்களும், முதல்வராக திரு. ய. சிவானந்தம் ங.அ., அவர்களும் உள்ளனர். திரு. பெருமாள்சாமி அவர்களின் மகள் செல்வி. ட. அருந்ததி ஆ.உ., ங.ந., அவர்கள் தந்தையாருக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டு வருகிறார். இக்கல்லூரியில் பயின்றமாணவ, மாணவியர் பலர் இன்று உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உயர் பதவியில் பணி புரிகின்றனர்.
சுயமாக தான் சம்பாதிக்கத் தொடங்கிய முதல் ஐந்து வருடங்களில் தனக்கு கிடைத்த லாபத்தில் பத்து சதவீதத்தை எடுத்து வைத்து ஆலயப்பணிகள், சமூகப்பணிகளை திறம்படச் செய்து வருகிறார்.
பெரும் நிலக்கிழாரும், இவர் நண்பருமான இன்ஜினியர் திரு. உ.ட. முத்துக்குமார் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக இவரை உற்று நோக்கி, “எதையும் சரியான நேரத்தில் செய்தல், நேர நிர்வாகத்தைக் கடைப்பிடித்தல், செய்யும் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறன் பெற்றிருத்தல், நல்ல விஷயங்களை ஏற்று அப்போதே கடைப்பிடித்தல், பரந்த எண்ணம் கொண்டிருத்தல், தொழிலாளர்களிடம் பாராட்டி வேலை வாங்கும் நுட்பத்தை அறிந் திருத்தல், தரமான பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கும் திறன் பெற்றிருத்தல், இவருடைய வேலைகளை தனதாக எடுத்து முடிக்கும் திறன் கொண்டவர்களை நண்பர் களாக அடைந்திருத்தல் போன்ற வெற்றிக் குணங் களைக் கொண்டவர் திரு. பெருமாள்சாமி” எனப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.
சத்தியமங்கலம் ஆடிட்டர் இருக்கும் திரு. மயில்சாமி அவர்கள் “சிறந்த உழைப்பு, விவசாயத்தில் ஆர்வம், வாழ்வில் நாணயம், புத்திக்கூர்மை ஆகியவற்றைக் கொண்டு சிறு விவசாயி என்ற நிலையில் இருந்து உயர்ந்த நிலையை எட்டியவர் நண்பர் பெருமாள்சாமி” என புகழ்மாலை சூட்டுகிறார்.
விவசாய பூமிகளால் சூழப்பட்ட கிராமத்தில் இருந்து கொண்டும் வாய்ப்பைத் தேடி பொருள் ஈட்ட முடியும், சாதனைகள் படைத்திட முடியும் என நிரூபித்துள்ளார்
திரு. த. பெருமாள்சாமி அவர்கள்.
- சத்தியமங்கலத்திலிருந்து
M. நம்பிராஜன்.
- None Found







it is good