![]() |
உலகில் உள்ள ஒவ்வொரு படைப்புகளும் எப்படி மற்றவற்றைவிட அதிக கவன ஈர்ப்பை பெறுகிறது என்று நோக்கும் போது கீழ்க்காணும் சில விஷயங்களும் நம் மனத்திரையில் ஓடாமல் இருப்பதில்லை.
பூக்களில் ஒருவகைப்பூக்கள் மட்டும், பறவை களில், மிருகங்களில், மனிதர்களில் ஒன்று அல்லது ஒருவர் அல்லது ஒருசில(ர்) மட்டும் அதிக கவன ஈர்ப்பை பெறு கிறது. காரணம் என்னவென்று பார்த்தால் வித்தியாசம். மற்ற வற்றிலிருந்து இயற்கையாகவோ அல்லது தங்களை தாங்களே வித்தியாசப்படுத்தி வெளிப்படுத்துவதால் மட்டுமே தான் கவன ஈர்ப்பை பெறமுடிகிறது. கவனஈர்ப்பு நன்மை பயக்குவதாகவோ சந்தோஷப்படுத்துவதாகவோ, சமாதானப்படுத்தவதாகவோ இருந்தால் அந்த வித்தியாசம் நேர்முக மனப்பாங்கின் வெளிப்படுத்துதல் என கருதப்படுகிறது.
பல நேரங்களில் மற்றவர்கள் தங்களை எப்படி வித்தியாசப்படுத்தி காண்பித்துள்ளார்கள் என்பதை வழிகாட்டியாக பின்பற்றி நம்மை வித்தியாசப்படுத்தி வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம். அதற்காக அப்படியே அடுத்தவரை நகல் எடுக்க வேண்டிய அவசியமில்லை. எடுக்கவும் கூடாது. சரியாக தலைவாரி அழகுபடுத்திக் கொண்டிருந்த கதாநாயகர்களின் மத்தியில் தலைமுடியை கோதிக்கொண்டு வித்தியாசமான தோற்றத்துடன் தன்னை வெளிப்படுத்திய ரஜினிகாந்தை உதாரணமாக்கிப் பாருங்கள்.
அரிச்சந்திரா நாடகத்தை கண்ட ‘மோகன்தாஸ்’ காந்தி, ‘மகாத்மா’ காந்தியாக உறுதுணையாக இருந்தது வாய்மை என்னும் மையக்கருத்து. ஆனால் அரிச்சந்திரா நாடகத்தை பார்த்தால் மட்டும் தான் வாய்மையை கடைப் பிடிக்க முடியக்கூடிய சாத்தியம் இருப்பதாக அர்த்தமில்லை. பொய்மையால் விளையும் தீமையை விளக்கும் ஏதாவது ஒரு நாடகத்தில் இருந்துகூட வாய்மையை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை உணரலாம். உங்களின் கற்றல் (உள்வாங்கி கொள்ளுதல்) எப்படி என்பதைப் பொறுத்தும், கற்றலில் இருந்து பின்பற்றுதல், அதனை தொடர்தல், தொடர்வதை மேன்மைபடுத்துதல் போன்றவற்றில் எப்படி வித்தியாசமாக கையாளுகிறீர்களோ அதைப்பொறுத்து தான் உங்களின் வெளிப்படுத்துதல் நேர்முகமானதா அல்லது எதிர்முகமானதா என்பது தெரியும். அதுவே உங்களின் வெற்றி நிலையையும் தீர்மானிக்கும்.
இதிகாசங்களில் வரும் நல்லவர்கள் எனப் போற்றப்படும் பாண்டவர்கள் ஐந்து பேர்களும் எப்படி தங்களுக்கென்ற தனிமுத்திரையை பதிக்க முடிந்தது என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்தியது தான் காரணம் என்பதில் மாற்று இருக்க சாத்தியமில்லை.
சிந்தித்து பாருங்கள், இவ்வுலகில் நிகழ்ந்த, நிகழப் போகிற புதிய கண்டுபிடிப்புகள் (அனைத்து துறைகளிலும்) முன்பு அல்லது தற்போது இருப்பவற்றில் இருந்து வித்தியாசப்பட்டுள்ளது அல்லது வித்தியாசப்படப்போகிறது என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.
எனவே நண்பர்களே வித்தியாசம் வெற்றியின் இன்னொரு பரிமாணம் தானே. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் முடிந்தவரை உங்களை வித்தியாசமாக வெளிப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம். ஆம், நண்பர்களே! மற்றவர்களின் கவனம் ஈர்க்க.
இனி, வித்தியாசப்படுவோம் வெற்றியாளர்களாக!
ஆர். முருகேசன் M.A., M.Phil., Ph.D. (Psy)
மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்






