நீங்கள் உங்கள் துறையில் வளர்ந்துவரும் நட்சத்திரமென்றால், விமர்சனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன், காதில் வாங்கும் முன் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். காலங்காலமாக அனுபவசாலிகள் சொல்லிவரும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்தான் அவை. “காய்ச்சமரம் தான் கல்லடி படும்”.

பாருங்கள். எவ்வளவு அர்த்தம் செறிந்த சொற்களென்று. உங்களிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதால்தான், நீங்கள் ஏதோ சாதித்திருப்பதால்தான், உங்களைப் பற்றி பிறர் விமர்சிக்கிறார்கள். ஒன்றுமே செய்யாமல் நீங்கள் மூலையில் முடங்கி கிடந்தால், யாராவது உங்களைப் பற்றிப் பேசியிருப்பார்களா என்ன?

சரி. இந்த உண்மையைப் புரிந்து கொண்டீர்களல்லவா? அதே வேகத்தோடு இப்பொழுது தொடர்ந்து பேசுவோம். விமர்சனங்கள் எழும்போது நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றி இப்போது சிந்திப்போம். முதலில் நம்மைக் குறித்து பிறரது விமர்சனங்கள் எழுவது இயல்புதான். அனைவருக்கும் நிகழக்கூடிய விஷயம்தான் என்ற மனநிலையோடிருங்கள்.

அடுத்தது உங்கள் மனக்கதவை திறந்தே வைத்திருங்கள்.

உங்களைக் குறித்த விமர்சனங்களைக் கேட்பதற்குத் தயாராயிருங்கள்.

கோயம்புத்தூரில் ஒரு சுயமுன்னேற்றப் பயிற்சி நடத்திக் கொண்டிருந்த போது, பார்வை யாளர்களைப் பார்த்து, ‘உங்களை யாராவது விமர்சிக்கும்போது என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். நிறைய வித்தியாசமான விதம் விதமான பதில்கள் வந்தன. ஒருவர் சொன்னார், “காதுலயே போட்டுக்க மாட்டேன் மேடம். என் காதை இறுக்கமாய் மூடிக்குவேன்….” என்று.

இது சரியான கருத்தல்ல என்று சொல்லி தொடர்ந்து விளக்கமும் கொடுத்தேன். ஆம், என் அன்பு நெஞ்சங்களே… அதையேதான் இப்பொழுது உங்களுக்கும் சொல்லப் போகிறேன். தங்களைக் குறித்து விமர்சனங்கள் எழும்போது அவற்றைக் காதில் போட்டுக்கொள்ள மறுப்பதல்ல வெற்றியாளர்களின் அணுகுமுறை. நன்றாக காதுகொடுத்து கேளுங்கள். வெறுமனே கேட்பதோடு நின்று விடாதீர்கள். மிகவும் கவனமாகக் கேளுங்கள்.

*    அடுத்தது, அப்படி கவனித்துக் கேட்கும்போதே அந்த விமர்சனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் காரணத்தைக் கண்டுபிடியுங்கள். யார் சொல்கிறார்கள், என்ன அர்த்தத்தில் சொல்லப்படுகிறது, எப்படிப்பட்ட தொனியில் விமர்சன வார்த்தைகள் வந்து விழுகின்றன என்பதையெல்லாம் கவனித்து, அந்த விமர்சனத் தின் பின் ஒளிந்திருக்கும் காரணத்தைக் கண்டு பிடியுங்கள். உதாரணமாக, உங்கள் துறையிலேயே ஈடுபட்டு, இப்பொழுது நொடிந்து போயிருக்கும் நபர் உங்கள் மீது கொண்டுள்ள பொறாமையால் விமர்சிக்கிறாரா… அல்லது போகிறபோக்கில் ஏதாவது சொல்ல வேண்டுமேயென பேசத் தெரியாத சில லொட லொட ஆசாமிகளின் அர்த்தமற்ற உளறலா… அல்லது உண்மையிலேயே சரியான, நடுத்தரமான, எவ்வித உள்நோக்கமும் அற்றவிமர்சனமா, உங்கள் மீது கொண்டுள்ள அக்கறையினால் எழுந்த விமர்சனமா என்பதைக் கண்டுபிடியுங்கள்.

*    அடுத்தது, எடுத்த எடுப்பிலேயே, விமர்சனங்கள் உங்கள் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் தோன்றியது என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். அந்த விமர்சனம் உண்மையா, தவறா என்பதை உங்கள் அறிவை மட்டும் பயன்படுத்தி கண்டுபிடியுங்கள். உதாரணத்திற்கு இப்பொழுது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். நீங்கள் ஒரு ஓட்டல் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் வருகிறார். நீங்கள் அவருக்கு நூடுல்ஸ் கொடுக் கிறீர்கள். சாப்பிட்டுவிட்டு, ‘நல்லாயில்லையே…’ என்கிறார். உடனே எடுத்த எடுப்பில், ‘இவனுக்கு நம்ம மேல பொறாமை. தனியா தொழில் தொடங் கிட்டானே, நம்மளால முடியலயேங்கற வயித்தெறிச்சல். அதான் இப்படி சொல்றான்…” என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

அவர் சென்றவுடன் முதலில் நீங்கள் அதே உணவை வரவழைத்து சாப்பிட்டுப் பாருங்கள். அற்புதமாக மிகவும் சுவையாயிருக்கிறதா இல்லை சுமார் ரகமா, அல்லது சுத்த மோசமா என்று உங்கள் நாக்கு சொல்லிவிடும்.

*    சுமார் ரகம் என்று தோன்றினாலோ, சுத்த மோசம் என்று உணர்ந்தாலோ, அந்த நபர் சொன்னது சரிதான். அந்த விமர்சனத்தில் தவறேதுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சமையல்காரரை அழைத்து, ‘என்ன பிரச்சனை என்று கேளுங்கள்; காரணங்களை அலசுங்கள். ஒருவேளை, அன்றைக்கு ஏதோ அவசரத்தில் கூடக்குறைய பொருட்களைப் போட்டிருக்கலாம். அல்லது சைனீஸ் உணவுகளே சமைக்கத் தெரியாதவராக இருக்கலாம். வேலை கிடைக்க வேண்டுமே என்றஆதங்கத்தில் ‘எல்லாம் சமைக்கத் தெரியும்’ என்று உங்களிடம் பொய் சொல்லிருக்கலாம்.

முதல் காரணமென்றால்… அதாவது, அன்றைக்கு ஏதோ எதேச்சையாக சுவை மாறி விட்டது என்றால் அந்தப் பிரச்சனையை அதோடு விட்டுவிட்டு, அடுத்த நாள் மீண்டும் அதே உணவை சாப்பிட்டுப் பார்த்து, காரணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இனியொரு முறை இப்படி நடக்கக்கூடாது. சமையல்  விஷயத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சுவையை சரிபார்க்க வேண்டியது அவசியம்’ என சமையல்காரருக்கு உணர்த்துங்கள்.

இரண்டாவது காரணமென்றால், அதாவது அவருக்கு ‘நூடுல்ஸ்’ சமைக்கவே தெரியாது என்றால்…” ஒன்று அவரைப் பயிற்சிக்கு அனுப்புங்கள். அல்லது சைனீஸ் வகை உணவுக்கென்று வேறொரு சமையல்கலை நிபுணரை வேலைக்கு அமர்த்துங்கள்.

உங்கள் நண்பரது விமர்சனம் உண்மை எனும் போது நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென இப்பொழுது பார்த்தோம்… மாறாக, நீங்கள் சுவைத்துப் பார்க்கும்போது மிகவும் அற்புதமான சுவையோடிருந்தது. உங்கள் குடும்பத்தார், உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் என மேலும் சிலரிடம் கருத்துக் கேட்ட போது, அவர்களும் ‘அற்புதம்’ என்றே சொன்னார்கள் என்றால், உங்கள் நண்பரின் விமர்சனத்தை நீங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம். இன்னும் சில முறை அவருக்கு வேறு வேறு உணவுப் பொருட்களை சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் இதேபோல் எதிர்மறை விமர்சனத்தை, கொஞ்சம் கூட தயக்கமோ, சந்தேகமோ, நாசூக்கோ இல்லாமல் கடினமான தொனியில் சொல்கிறானென்றால், உங்களை உற்சாக மிழக்கச் செய்வதே நோக்கம் என்பது போல் சகட்டுமேனிக்கு ‘ஓட்டலை’ விமர்சிக்கிறார் என்றால், புரிந்து கொள்ளுங்கள். அவர் நல்ல மனதோடு விமர்சிக்கவில்லை. எனவே, நீங்கள் அந்த தவறான, பொய்யான விமர்சனத்தைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆம். என் அன்பானவர்களே, உங்கள் மீது தொடுக்கப்படும் விமர்சனக் கணைகளை ஆராய்ந்து, அவை ‘சரி’ என்று உங்கள் மனதிற்குப் பட்டால், விமர்சித்தது யாராயிருந்தாலும், உங்களை விட வயது, வசதி, திறமை, அனுபவம் எல்லாம் குறைந்தவராயிருந்தாலும் பரவா யில்லை. விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு, அவரது விமர்சனம் உங்களை பட்டை தீட்டிக் கொள்ள எவ்வளவு உதவியாயிருந்தது என அவரிடம் சொல்லுங்கள்.

மாறாக, உங்கள் மீதான விமர்சனம் தவறானது என்று உங்கள் அறிவு உணர்த்தும் போது, உங்கள் ஆய்வு, சுய ஆய்வு, பகுத்தாய்வின் முடிவு நிரூபித்து விட்டால்… அந்த விமர்சனத்தை சொன்னவர் எவ்வளவு பெரிய ஆளாயிருந் தாலும் சரி, திறமை, பணம், சமூக அந்தஸ்து, வயது என அத்தனை விஷயத்திலும் உங்களை விட உயர்ந்தவராயிருந்தாலும் சரி ‘தூசியாய்’ மதித்து ஒதுங்கிச் செல்லுங்கள். ‘எனது முயற்சிகளை, உன் வார்த்தை, விமர்சனம் எந்த விதத்திலும் பாதிக்காது…’ என்று மனதில் சொல்லிக் கொண்டு தொடர்ந்து உங்கள் முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

எனவே, என் அன்பு நெஞ்சங்களே… உங்கள் துறையில் நீங்கள் முன்னேற வேண்டு மென்றால், வெற்றிப்படிக்கட்டுகளில் மளமள வென ஏற வேண்டுமென்றால் ‘சகிப்புத்தன்மை’ என்ற அற்புதகுணம் உங்களுக்குக் கைவர வேண்டும். சகிக்க முடியாத மனிதர்களை சகித்துக்கொள்ள, விமர்சனங்களை சகித்துக் கொள்ள, விமர்சனத்திற்குள்ளாகும் சூழலை சகித்துக் கொண்டு, அதை ஆராய்ந்து, உண்மையா, பொய்யா எனக் கண்டறிந்து… ‘ஆம்’ எனில் அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் ‘தைரியத்தையும்’ இல்லையென்றால், ‘தூசிக்கு சமமாய் மதித்து தூக்கியெறிந்து விடும் அலட்சியத்தையும்’ வளர்த்துக் கொண்டீர் களென்றால்… வெற்றி உங்கள் காலடியில் மண்டியிடும்!

வெற்றிப் படிக்கட்டுகளில்… மிக நீண்ட, பெரிய படியை கடந்து விட்டோம். அடி ஆழம் வரை சென்று அலசி ஆராய்ந்து விட்டோம். உளவியல் ரீதியான அணுகுமுறையோடு கூடிய சுயமுன்னேற்றக் கருத்துக்களும், உங்கள் தொழில் வெற்றிக்கான வழிமுறை களையும் உள்ளடக்கிய வித்தியாசமான, பயனுள்ள விஷயமாய் இந்த ‘சகிப்புத்தன்மையும், விமர்சனங்களும்’ அமைந் திருக்கும் என நம்புகிறேன். ஆம்தானே?

சரி, அடுத்த படிக்கட்டு என்ன? இதே உற்சாகத்தோடும், ஆவலோடும் அடுத்த மாதம் வரை காத்திருங்கள். சரியா?

(தொடரும்)