இல.செ.க. என்று எல்லோராலும் அன்புடன்     போற்றப்படும் டாக்டர் இல.செ.கந்தசாமி     அவர்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள இலக்கபுரம் என்ற ஊரில் 1939-ஆம் ஆண்டில் பிறந்தவர்.

இராசிபுரம் நகரவைப் பள்ளியிலும், மாயவரம் தருமபுரி ஆதினத் தமிழ்க்கல்லூரி யிலும் பயின்றவர்.

கல்லூரி முதன்மையும், புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மையும் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனிப்பட M.A. தேர்வு எழுதி பல்கலைக்கழக முதன்மை பெற்றவர்.

1972 முதல் வேளாண்மைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி யாற்றினார். 10க்கும் மேற்பட்ட சுயமுன்னேற்ற நூல்களையும், நான்கு நாவல்களையும், 50க்கும் மேற்பட்ட வேளாண்மை அறிவியல் நூல் களையும் எழுதியுள்ளார்.

டாக்டர் இல.செ.க. அவர்களது நூல்கள் சென்னை, மதுரை, அண்ணாமலை, பாரதியார், காந்தி கிராமம், வேளாண்மை, கள்ளிக் கோட்டை, கொச்சின், டில்லி ஆகிய ஒன்பது பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டன.

சங்க இலக்கியம் தொடங்கி புதுக்கவிதை வரை பரந்துபட்ட இலக்கிய பரப்பில் அனுபவமுள்ளவர்.

சமூக சிந்தனையாளராகவும், வேளாண்மை அறிவியல் வளர்ச்சியில் ஆர்வமுடையவராகவும் விளங்கினார்.

வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வெளியீடான ‘வளரும் வேளாண்மை’ மாத இதழின் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

1989-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனிமனித சிக்கல்களைத் தீர்ப்பது, சாதாரண மனிதர்களையும் சாதனையாளர் ஆக்குவது,
இளைஞர்களிடையே உலகளாவிய பார்வையை உருவாக்கப் பாடுபடுவது, தரமான இலக்கிய படைப்புகளுக்கு ஆதரவு தருவது, தேசிய நதிகளை இணைக்கப்பாடுபடுவது என்ற முக்கிய குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ‘தன்னம்பிக்கை’ மாத இதழைத் தொடங்கினர்.

1992-ஆம் ஆண்டு ஏப்ரம் 6ஆம் நாள் யாரும் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினார்.

அவர் மறைந்து 17 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

‘தன்னம்பிக்கை’ முன்னேற்றத்தின் மூலதனம் என்கிற தாரக மந்திரத்தை தமிழகம் முழுவதும் ஒலிக்கச் செய்த அம்மாமனிதரின் நல் ஆசியுடன் டாக்டர் இல.செ.க. அவர்களின் துணைவியார் கமலம் கந்தசாமி அவர்களின் வாழ்த்துக்களுடன் தன்னம்பிக்கை மாத இதழின் 20வது ஆண்டு விழா 14.06.2009 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி, பாரதீய வித்யா பவன் ஆர்.எஸ்.புரம், கோவையில் இனிதே சிறப்புடன் நடைபெற்றது.

‘தன்னம்பிக்கை’ மாத இதழானது டாக்டர் இல.செ.க. அறக்கட்டளை மூலமாக கல்வி, மருத்துவ, சமூக விழிப்புணர்வு சேவைகளை திறம்படச் செய்து வருகிறது. மேலும் மாவட்டங்கள் தோறும் ‘ தன்னம்பிக்கை வாசகர் வட்டம்’ அமைத்து அதன் மூலம் நிறைய சுய முன்னேற்றக் கருத்துக்களை, பயிற்சிகளை மாதந்தோறும் இலவசமாக நடத்தி வருகிறது.

தற்போது இவ்விதழின் பதிப்பு ஆசிரியராக திரு.க.கலைக்கண்ணன், ஆசிரியராக முனைவர் க. கலைச்செல்வி, இணை ஆசிரியராக என். செல்வராஜ், சிறப்பாசிரியராக டாக்டர் கோ. இராமநாதன், டாக்டர் பெரு. மதியழகன் இருந்து வருகிறார்கள்.

தனிமனித முன்னேற்றத்தில் தனிப்பெரும் அக்கறைசெலுத்தும் இதழாக செயல்பட்டு வரும், ‘தன்னம்பிக்கை’ 20வது ஆண்டு விழாவில் இதழின் பதிப்பாசிரியர் திரு.க.கலைக்கண்ணன் அவர்கள் விழாவிற்கு வருகை புரிந்திருந்தவர் களை வரவேற்று பேசுகையில்,

சிந்தித்து கொண்டே இருந்து விடாமல், சிந்தனைகளை நல்ல செயலாக்கம் ஆக்க வேண்டும் என்பது அப்பா டாக்டர் இல.செ.க. அவர்களின் கருத்து.

1989ஆம் ஆண்டு ‘தன்னம்பிக்கை’ இதழை அப்பா ஆரம்பித்தபோது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் அவருக்கு உறுதுணைôக இருந்து வந்தேன். எதிர்பாராத விதமாக அப்பா இயற்கை எய்தியபோது தன்னம்பிக்கை இதழை தொடர்ந்து நடத்துவதற்கு பெருமளவு சிரமப்பட வேண்டியிருந்தது. சிரமம் தானே சிகரத்தை தொட வைக்கும் என்று தொடர்ந்து போராடி னேன். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா சென்றேன். இடைப்பட்ட காலங்களில் ஸ்ரீ அன்னபூர்ணா பெரியவர் திரு.தாமோதரசாமி நாயுடு அவர்கள் ‘தன்னம்பிக் கையை’ ஸ்ரீ அன்னபூர்ணா உணவகங்களில் விற்பனைக்கு வைக்க அனுமதி தந்து ஊக்க மளித்தார். இதழின் வளர்ச்சிக்கு பலரும் உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்றுமே நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.

தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறோம். சிறிய அளவு பயன்பாட்டுப் பொருள் பெருமளவு பயன்பாட்டு பொருளாக மாற்றப்பட்டு வருகிறது. காலம் ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பொழுது அதனால் பயன்பாடு மக்களுக்கு எந்தளவு கிடைக்கிறது என்பதை பொருத்துதான் பொருளின் தரம் பேசப்படுகிறது. சாதாரண மனிதரையும் சாதனையாளன் ஆக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தன்னம் பிக்கை இதழ். சமூக நலனோடு பேராற்றல் படைத்த இளைஞர்களை அதிகம் உருவாக்கி ஆரோக்கியமான, ஆனந்தமான சமுதாயம் படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் நன்றாகச் செயல்பட சமூக ஆர்வலர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், விளம்பரதாரர் களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

KPN டிராவல்ஸின் இயக்குநர்

திரு. K.P. நடராஜன் அவர்கள்

தனது தலைமை உரையில்,

‘வானத்திற்கு எல்லை இல்லை

மகிழ்ச்சிக்கு முடிவு இல்லை
கடின உழைப்பிற்கு
ஈடு இணை ஏதுமில்லை
வெற்றிக்கு இனி தூரமில்லை,
வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்’.

இந்த இனிய விழாவில் பங்கெடுத்துக் கொள்வதை பெருமையாக கருகிறேன். காரணம், 1967-ல் இந்த கோவையில் இருந்து தான் என் டிராவல்ஸ் பணியைத் தொடங்கினேன். தமிழகத்திலேயே முதல் இரவு பேருந்து வசதியை கோவை ரயில் நிலையத்திலிருந்து பெங்களூருக்கு துவக்கினேன்.

தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் எங்க ஊர்க்காரர் என்பது மேலும் பெருமையாக இருக்கிறது.

முயற்சியும், உழைப்பும் இருந்தால் முடியாதது என்பது எதுவுமே இல்லை.

வருங்கால சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்டக்கூடிய இதழாக ‘தன்னம்பிக்கை’ வளர்ந்திருக்கிறது. மென்மேலும் வளர்ந்தோங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார்.

முன்னிலை வகித்த திரு. R. வெங்கடேஷ் பாபு (இயக்குநர், ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர் உணவகங்கள்) அவர்கள்,

‘தன்னம்பிக்கை’யின் மீதும் டாக்டர் இல.செ.க. மீதும் தனிப்பற்றுதல் கொண்டிருந் தவர் அப்பா திரு.தாமோதரசாமி நாயுடு அவர்கள். அவர் தந்த பேராதரவை தொடர்ந்து நாங்கள் இன்றைக்கும் தந்து வருகிறோம்.

க.கலைக்கண்ணன் அவர்கள் எனது இனிய நண்பர். அவரின் சிறப்பான இந்த முயற்சிக்கு தொடர்ந்து நல்லாதரவு தருவதில் பெருமைப் படுகிறோம் என்றார்.

இந்திய தொழில் வர்த்தக சபையின் செயலர் திரு.ஈ.நந்தகுமார் அவர்கள் தனது வாழ்த்துரையில்,

1989ஆம் ஆண்டு 16 பக்கங்களில் 500 சந்தாதாரர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இதழ்தான் தன்னம்பிக்கை. இளைஞர்களுக்கு நல்வழிகாட்டவும், சமுதாயத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படவும் அமரர் கிருஷ்ணசாமி கவுண்டர், திரு.தாமோதரசாமி நாயுடு அவர்களின் நல்லாதரவில் டாக்டர் இல.செ.க. இவ்விதழை துவக்கினார்கள். சாதனையாளர்கள், உழைப்பில் உயர்ந்தவர்களின் நேர்முகங்களை வெளியிட்டு சாதிக்க தூண்டும் பணியை செவ்வனே செய்து வருகின்ற தன்னம்பிக்கை இதழ் வரும் காலங்களில் மாதம் இருமுறையாகவோ, வார இதழாகவோ வருமளவிற்கு வளர வேண்டும் என்றார்.

திரு. தூசி தியாகராஜன் (இயக்குநர், கனரா வங்கி தொழிற்பயிற்சி மையம், பெரியநாயக்கன் பாளையம்) அவர்கள் தனது வாழ்த்துரையில்,

1972-ஆம் ஆண்டு முதல் அய்யாவின் இறுதிக்காலம் வரை அவருடன் இருக்கக்கூடிய பேறு பெற்றவன் நான். ஐந்து ஆண்டுகள் மாணவனாக, ஐந்து ஆண்டுகள் உடன் இருந்து பணிபுரியக்கூடிய வாய்ப்பு பெற்றவனாக இருந்தேன்.

அவரிடம் படித்தபோதும், அவரிடம் பணிபுரிந்த போதும் தான் நான் ‘தன்னம்பிக்கை’ நிறைந்த மனிதனாக மாறினேன்.

அவரோடு மாலை நேரங்களின் நான் நடைப்பயணம் மேற்கொண்ட போதெல்லாம் இன்றைய இளைஞர்களிடம், மக்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது, அதை எப்படியாவது வரவழைக்க வேண்டும் என்பார். அப்போது நான் அய்யா, தன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கக்கூடிய பொருளா அது அவரவர் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றேன். உடனே அப்போதே அய்யா சொன்னார் ‘தன்னம்பிக்கை’ கடையில் கிடைக்கும் என்று. அன்று சொன்னார் இன்று கிடைக்கிறது தன்னம்பிக்கை கடைகளில்.

‘தன்னம்பிக்கையை’ கடைக்கு கொண்டு வந்தவர் டாக்டர் இல.செ.க. அவர்கள். தன்னம்பிக்கை அவருடைய கனவு. அதுபற்றி அவர் தன்னுடைய புத்தகத்தில் இப்படி பதிவு செய்திருக்கிறார். “இந்த நாட்டின் மண்ணும் மரமும் தான் எனது கல்விச் சாலைகள். இந்த நாட்டின் மக்கள்தான் எனது பாடப்புத்தகங்கள். ஆசிரியர் கிடைக்காத மாணவன் நான். குரு இல்லாத ஏகலைவன் போல இவைகளை நான் தன்னந்தனியனாகவே கற்றுத்தெளிந்தேன். இரவெல்லாம் பகலாக்கி சமுதாயத்தில் உள்ள குறைநிறைகளைக் கண்டேன். அவை என்னுள் கண்ணீராகவும், கனவாகவும் வெளிப்பட்டன. சில நேரங்களில் வெடிக்கப்பட்டதும் உண்டு. யாரையும் இனி எதிர்பார்த்து பயனில்லை. இருப்பதை வைத்துக்கொண்டு உடனடியாக என்ன செய்யமுடியுமென்று எண்ணினேன். தன்னம்பிக்கையை தொடங்கினேன்” என்கிறார்.

மேலும் அவரே, “நமது இந்திய பல்கலைக் கழகங்கள் குறிப்பாக தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை யூட்டும் புத்தகங்களை பாடநூலாக வைக்க வேண்டும். செத்துப்போன புத்தகங்களை இனி மேலாவது பாடநூலாக வைக்காதிருக்க இந்த விழுமிய வேளையில் வேண்டுகோள் விடுத்துக் கொள்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

தன்னம்பிக்கையை உருவாக்கிட டாக்டர். இல.செ.க. பெரும்பாடுபட்டார். சின்னஞ்சிறு இதழாகத் தொடங்கி அதிக கட்டுரைகள் தரமானதாக இடம்பெற பலவாறு அலைந்து பல ஆசிரியர்களைச் சந்தித்து, கட்டுரைகள் வாங்கிச் சாதிக்கத் தூண்டினார்.

டாக்டர். இல.செ.க. அவர்களின் முதல் நாவலான ஓ. . . அன்றில் பறவைகளே என்ற நூலில் முன்னுரை தந்திருக்கிற கவிஞர் மு. மேத்தா அவர்கள்,

“காவியங்களில் மட்டுமே சந்திக்கக்கூடிய நல்ல மனிதர்களை வாழ்க்கையில் நாம் சந்திக்கும் போது அவர்களை வாழ்த்தக்கூட முடிவதில்லை. வணங்கத்தான் தோன்றுகிறது. இது இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல நாவலை எழுதிய டாக்டர் இல.செ.க. வுக்கும் பொருந்தும்” என்று எழுதியிருக்கிறார். அந்தளவு உயர்ந்த மனிதராக அய்யா வாழ்ந்தார்கள்.

ஐந்து இலட்சம் இளைஞர்களை சந்தித்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார் டாக்டர். இல.செ.க.

உழவர் பெருமக்களின் மீதும் அவர் பார்வை நன்கு பதிந்து இருந்தது. வளரும் வேளாண்மை பத்திரிக்கை நடத்தும் போது “வரம்பே தலைகாணி, வைய்க்கோலே பஞ்சு மெத்தை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாம் ஏதாவது செய்துவிட வேண்டும். பல்கலைக்கழகங்களிலே கண்டு பிடிக்கப்படுகிறவைகள் பண்ணை நிலங்களுக்குச் சென்று சேரவேண்டும். அந்த பணிகளைத்தான் வளரும் வேளாண்மையில் செய்து கொண்டிருக் கிறேன்” என்று அடிக்கடிச் சொல்வார்கள்.

ஒவ்வொரு எழுத்தும் இந்த ஊருக்குச் சொந்தமாக வேண்டும். இந்த உலகத்தை உயர்த்திட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்படிப்பட்ட டாக்டர். இல.செ.க. ஐயா அவர் களின் தன்னம்பிக்கை “ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ்போலே” வாழ வேண்டும் வளர வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் என்றார்.

திரு. சூரியன் அவர்கள்

(சுய முன்னேற்றபயிற்சியாளர், கோவை)

என்னுடைய நூல்களை வெளியிடு வதற்கும் என்னுடைய பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் சென்று சேருவதற்கும் பக்கபலமாக இருந்தது ‘தன்னம்பிக்கை’.

ஒரு ரோஜா மலர்ந்து மணம் வீசுகிறது. நுகர்வது, நுகராதது சமுதாயத்தின் பொறுப்பு என்பதுபோல் தன்னம்பிக்கை மாத இதழ் தொடர்ந்து நல்ல பல நம்பிக்கையூட்டுகிற கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெறுவது நம்மிடம்தான் இருக்கிறது.

டாக்டர் மு.வ. அவர்கள் சொல்வார்கள் “விதைகளைத் தூவிச்செல்வது நம் கடமை. ஆயிரக்கணக்கான விதைகளைத் தூவுவோம். ஒருசில விதைகள் முளைத்தாலே அவை மரங்களாகி ஆயிரக்கணக்கான விதைகளை தூவி விடும்” என்பதுபோல தொடர்ந்து தன்னம்பிக்கை நல்ல விதைகளைத் தூவி வருகிறது. எல்லாருக் குள்ளும் சக்தி இருக்கிறது. அந்த சக்தியை ஒழுங்குபடுத்தும்போது அது மாபெரும் ஆற்றலாக வெளிப்பட்டு அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்பாடு ஆகிறது. அந்த வகையில் நெறிப்படுத்துவதில், வளப்படுத்து வதில், ஊக்கப்படுத்துவதில் தன்னம்பிக்கை

மாத இதழ் அற்புதமான பணியைச் செய்து கெண்டிருக்கிறது.

வாசகர்கள் இந்த இதழின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து இன்னும் வாசகர்களை அதிகப்படுத்த உதவிகரமாக இருக்க வேண்டும். அது நாம் செய்யக்கூடிய நல்ல பணியாகும் என்றார்.

திரு. எஸ்.ஆர்.கே. தேவராஜன் அவர்கள், கோவை.

திறமையாக செயல்படக்கூடிய ஆற்றலை எனக்கு கற்றுக்கொடுத்தவர் டாக்டர், இல.செ.க. கோவை, சர்க்கார் சாமக்குளத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் நான் பிறந்தவன். பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். மேற்கொண்டு என்ன பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பது என்பது எனக்குத் தெரியவில்லை. என்றாலும் அரசு கலைக் கல்லூரியில் முதல் பாடப்பிரிவில் சேர்ந்து பி.எஸ்சி. (கணிதம்) எடுத்து படித்தபோது அன்றைக்கு தமிழாசிரியராக கவிஞர். மு. மேத்தா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்போது தமிழ் மன்றத்தில் டாக்டர். இல.செ.க. அய்யா அவர்கள் பேச வந்திருந்தார்கள். “கிடைக்காததைப் பற்றி கவலைப்படாமல் கிடைத்ததில் இருந்து என்ன சாதிக்கமுடியும் என்று சிந்தித்து செயல்படு. நீ சாதனை யாளன் ஆகலாம்” என்றார். படிப்பு முடிந்ததும் ஒரு தனியார் நிர்வாகத்தில் சிறந்த பணியில் சேர்ந்தேன். அதை அய்யாவிடம் தெரிவித்தேன். இன்ஜினியரிங் துறையில் நீங்கள் வரவேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருப்பதனால் அதை இங்கு கூட நீங்கள் நிறைவேற்றிக் காட்டலாம் என்றவர், நேரத்தின் மதிப்பையும், தொழில்புரியும் இடத்தில் எப்படி நடந்துகொண்டால் உயரலாம் என்பதையும் மிகவும் அழகாக எனக்கு உணர்த்தினார்கள். அதன்படியே செயல்பட்டேன். முதலாளிக்கு என்னைப் பிடித்துப்போனது. 500 ரூபாய் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுத்தார். எதிர்பார்த்ததற்குமேல் சம்பளம் கிடைத்ததை மகிழ்ச்சியோடு அய்யாவிடம் தெரிவித்தேன். அப்போது அவர் இனி நீங்கள் இன்னும் கூடுதலாக அந்த தொழிற்கூடத்தில் உழைக்க வேண்டும் என்றார். சரி என்று உழைப்பைக் கொடுத்தேன். நான் ஆ.உ. முடிக்கவில்லை என்றாலும் எனக்கு கீழ் மூன்று இன்ஜினியர்களை பணியில் அமர்த்தி என்னை உயர்த்தி அழகு பார்த்தார் அன்றைக்கு என் முதலாளி. அந்த இடத்தை பெற்று இன்று நான் ஒரு ஸ்டீல் நிறுவனத்தின் நிறுவனராக இருக்க அவர் தந்த வழிகாட்டுதலே காரணமாகும்.

அடுத்தவர்களின் குறிப்பாக இளைஞர் களின் நலனில் அதிக அக்கறை காட்டிய அவர்களின் நூல்களை நாம் படிப்பதால் இந்த சமுதாயத்தில் நல்ல மனிதனாக, சாதனை

யாளராக நிச்சயம் வாழ முடியும் என்றார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்,

குமரகுருபர பொறியியல் கல்லூரியின் இயக்குநர் திரு. சி. இராமசாமி அவர்கள் :

1972-ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது நான் ங.நஸ்ரீ. மாணவன். 1975-ல் ஆராய்ச்சித் துறையில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். அந்த காலகட்டத்தில் தான் டாக்டர். இல.செ.க. அவர்கள் தமிழ்த்துறைபேராசிரியராக பணியில் சேர்ந்தார்கள். நூற்றுக்கு தொண்ணுற்றெட்டு விழுக்காடு விஞ்ஞானத்தைப்பற்றியே பேசிக் கொண்டிருக்கும் வேளாண் பல்கலைக்கழகத்தில் அன்றைக்கு விஞ்ஞானத்தோடு இலக்கியத்தை இணைத்த பெருமை டாக்டர். இல.செ.க. அவர் களையே சேரும்.

இலக்கியத்தில் வேளாண்மைத் தொழில் நுட்பக் கருத்துக்கள் பொதிந்திருப்பதை தன்னுடைய நூல்களின் மூலமாக எங்களுக் கெல்லாம் தெரியவைத்தவர் அவர். கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் என்ற மூன்று பல்கலைக் கழக பணிகளில் விரிவாக்கப்பணி என்பது சிறப்பானதாகும். ஏனெனில், அப்பணி இலட்சக் கணக்கான வேளாண் பெருமக்களை அடையக் கூடியதாகும். அதற்காக அப்போது “வளரும் வேளாண்மை” தோற்றுவிக்கப்பட்டது. விவசாயம் சார்ந்த கட்டுரைக்கு மத்தியில் கடிதம், இலக்கியம், தன்னம்பிக்கை கருத்துகளைச் சேர்த்து வாசகர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தினார். விஞ்ஞானிகள், பேராசிரியர்களுக்கு வரும் கடிதங்களை விட டாக்டர் இல.செ.க. அவர்களுக்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. அந்தளவு உழவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். அந்த கால கட்டங்களில் எல்லோருக்கும் பயன்பாடாக அமையக்கூடிய “தன்னம்பிக்கை” இதழை ஐயா ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்தது அழியாப் பெரும்பணி. காலமும் தன்னம்பிக்கை நிலைத் திருக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.
திரு. ஆர். சக்கரவர்த்தி அவர்கள்

(துணை ஆணையர், குற்றவியல் பிரிவு, கோவை மேற்கு)

“யானையின் பலம் தும்பிக்கையில்

மனிதனின் பலம் நம்பிக்கையில்”

என்று சொல்வார்கள்.

ஒரு மனிதன் நம்பினால் எல்லாம் முடியும் இங்கு. சிங்கப்பூர் இன்று உலகத்தில் தூய்மை யான நாடு, லஞ்சத்தில் குறைவான நாடு என்ற சிறப்பை பெற்றிருக்கிறது என்றால் அது ‘லீ’ என்ற மனிதனின் தன்னம்பிக்கை தான். என்னால் முடியும் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று நம்பி செயல்பட்டார், சாதித்துக் காட்டினார்..

சாதித்துக்காட்ட வேண்டும் என்ற துடிப் புடன் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை யுடன் செயல்பட்டதால்தான் இன்று நமக்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை கிடைத்தார்கள்.

அடிமைத்தனத்தை தகர்த்தெரிந்த திரு. ஆப்ரகாம்லிங்கன், அகிம்சை முறையில் சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மா காந்தி போன்றோர்களின் சாதிப்பிற்கு காரணமாக அமைந்தது தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை தான்.

சிந்திக்கும் மனிதர்களை, நல்லவர்களை ஒருங்கிணைப்பதுதான் ஒரு நாட்டின் பலம். நாடு நலம்பெற சுற்றுப்புறச்சூழலைக் கெடுக்கும் குப்பைகளை, லஞ்சங்களை ஒழிக்க பணம் தேவை யில்லை. நல்ல மனம்தான் தேவை.

நாடு தீயவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது. நல்லவர்கள் நிரம்பிய பூங்காவாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கு நல்ல பணிகளைச் செய்பவர்களுடன் நாமும் இணைந்து செயலாற்றுகின்ற மனப்பக்குவத்தை ஒவ்வொரு வரும் கொண்டுவந்து செயல்பட வேண்டும். அந்த வகையில் தன்னம்பிக்கையின் பணிக்கு நாமும் கரம் கொடுப்போம்.

நாம் ஒவ்வொரு வருமே நாமாக, மனிதர்களாக இல்லாமல் இந்த நாட்டின் பக்தனாக மாறினால்தான் நாமிருக்கும் நாடுவளம் பெறும், பலம் பெறும். ஆம், ஒரு நாட்டை அங்கு வாழ்கிறவர்கள் எந்தளவு நேசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அந்த நாட்டின் வளம், பலம் பேசப் படுகிறது. அந்த வகையில் பலம் நிறைந்த நல்ல இளைஞர்கள், மனிதர்களை உருவாக்கத்தான் இந்த தன்னம்பிக்கை மாத இதழ் செயல்பட்டு வருகிறது என்று மனதார பாராட்டுகிறேன்.

இளைஞர்களை இன்னும் நன்றாக ஒருங் கிணைத்து வளரும் தலை முறையினரிடையே தேச நலனை, தனிமனித ஆற்றலை மேம்படுத்த ‘தன்னம்பிக்கை’ இன்னும் பாடுபட வேண்டும். அதற்கு எங்களைப் போன்றவர்கள் துணையாக இருப்போம் என்றார்.

தன்னம்பிக்கை இணையதளத்தை

துவக்கி வைத்து “தன்னம்பிக்கை”

எழுச்சியுரை நிகழ்த்திய

டாக்டர் மயில்சாமி அண்ணதுரை அவர்கள் :

“சந்திராயன் -1″ விண்ணில் ஏவப்பட்டதும் வெற்றி குறித்த செய்திகளுடன் கோட்-சூட் அணிந்த என் முதல் புகைப்படத்தை வெளியிட்ட பெருமை ‘தன்னம்பிக்கை’க்கு உண்டு. தன்னம்பிக்கையில் என்னைப் பற்றிய செய்திகள் வந்த பின்பு நிறைய அழைப்புகள எனைத்தேடி வந்தன. நல்ல தரமான வாசகர்களுடன் தரமான கட்டுரைகள் தந்து இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க நன்றாக பாடுபட்டு வருகிறது என்பதை அறிந்து உள்ளம் மகிழ்ந்தேன். இன்றைக்கு

20-வது ஆண்டு விழா நிகழ்வில் தன்னம்பிக்கை இணையதளத்தை துவக்கி வைத்து எழுச்சியுரை நிகழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

விண்வெளித்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இளைஞர் களின் கையில்தான் உள்ளது. அந்த இளைஞர் களை, மாணவ மாணவிகளை தயார்படுத்தும் முயற்சியில் இப்போது நான் இறங்கியிருக்கிறேன். வாரத்தின் சனி, ஞாயிறு தினங்களில் அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தவும், அவர்களின் ஆற்றல் களை வெளிக்கொணரவும் அதிக ஆர்வத்தோடு செயல்பட்டு வருகிறேன்.

தற்போது ‘சந்திரயான்-1′ திட்டம் மிக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தன்னம்பிக்கை என்ற அடித்தளம்தான். அதேபோல் ‘சந்திரயான்-2′ திட்டம் மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரப்போகிறது. இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்ற இளைஞர் களிடம் இப்போது ஆர்வம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அண்மையில் 250 பணி யிடங்களுக்கு 1.25 லட்சம் பேர் விண்ணப்பித் திருந்தனர்.

இளைஞர்கள்தான் வருங்கால இந்தியா. எனவே அவர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. தவறான பாதைகளில் செல்லாமல் சரியான குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற வேண்டும். நல்ல பண்புகளை வெளி நாட்டில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தேசபக்தி, மாதா, பிதா, குரு பக்தி ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் அவசியம் இருக்க வேண்டும். நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை. முடியும் முடியும் என்று செயல்பட்டால் எல்லாம் முடியும். தன்னம் பிக்கை விடாமுயற்சி இரண்டும் இருந்தால் எல்லாரும் சாதிக்கலாம்.

- கவிஞர் மு. மேத்தாவின் வாழ்த்துரை

அடுத்த இதழில்