சென்னை எழும்பூர். மதியம்     மூன்றரைமணி. ரயிலின் வருகையை எதிர்பார்த்திருந்தது பல நூறு கண்கள். பெரிய பையும், வயிறு மாய் அங்கே ஆஜரானார் திரு. லூயிஸ். அவர் அருகே ஒரு சிறுமி, கையில் சிறுசிறு பொம்மைகள் மற்றும் பலூன்களுடன் நின்றிருந்தாள். “சார் பொம்மை வாங்குறீங்களா சார்…” என்று வினவினாள் அச்சிறுமி. அவளைப் பார்த்துவிட்டு தனது பாக்கெட்டினுள் கையிட்டார். அச்சிறுமி புன்னகையுடன் ஒரு பொம்மையினை நீட்டி, “பத்து ரூபா சார்!” என்றாள். லூயிஸ் தனது பாக்கெட்டிலிருந்து கைபேசி எடுத்து, “சொல்லுங்க ஜேம்ஸ். ஆமா சென்னை யிலதான்… ம்ம்ம்… பிரார்த்தனை எல்லாம் சுபமா முடிஞ்சிது! சரி நீங்க எப்ப கிளம்பறீங்க?… கோபமா? யார் மேல…. விடுங்க ஜேம்ஸ்… அமைதியா இருங்க! அமைதியா இருந்தா கடவுள் எப்பவுமே நல்ல வழி காட்டுவார். சரி ஜேம்ஸ்! ரயில் வர்றசத்தம் கேக்குது. அப்புறம் உங்கள கூப்பிடறேன்” என்று கூறி, கைபேசியை பாக்கெட்டில் இட்டு அருகிலிருந்த சிறுமியைப் பார்த்தார். முகத்தில் புன்னகையும், கையில் பொம்மையினை நீட்டி கொண்டு நின்றிருந்தாள். அச்சிறுமியை கண்டும் காணாததுமாய் திரும்பி கொண்டார் லூயிஸ்.

ரயில் வந்தது. மக்கள் கூட்டம் தனக்கான இருக்கைகளை தேடி ஓடி பற்றிக் கொண்டது. பலர் நின்றபடியும், சிலர் அமர்ந்தபடியும் பயணம் தொடங் கியது. லூயிஸ் தனது இருக்கையினை வேகமாய் பிடித்து கொண்டதில் அவர் முகத்தில் ஒரு தந்திர புன்னகை! மூக்கு கண்ணாடியிட்டு, கையில் புத்தக மொன்றை கொண்டு அதனுள் மூழ்கினார். கூட்ட நெரிசலுக்கிடையே சிற்றுண்டியும், உணவுப் பண்டங் களையும் விற்பவர்கள் அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் நடந்து செல்லும்பொழுது கூட்ட நெரிசலின் காரணமாக எல்லோரையும் இடித்துச் செல்ல வேண்டியதாக இருந்தது. அப்போது லூயிஸின் மேலும் இடித்துக் கொண்டே சென்றனர். தொடர்ந்து இடித்துக் கொண்டு அங்குமிங்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள். வெகுநேரமாய் சகித்துக் கொண்டிருந்த லூயிஸ் சட்டென்று கோபம் தலைக்கேறி, தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வீசிவிட்டு, சிற்றுண்டி விற்பவனின் சட்டையைப் பிடித்தார். “ஏன்டா… காசு கொடுத்துதான இந்த ரயிலில்ல வர்றோம்.. சும்மா இடிச்சுக்கிட்டே போற! படிச்சவங்களாச்சே, அவங்கள இடிக்காம போகணுங்கிற அறிவு இல்ல?” என்று கூச்சலிட்டார் லூயிஸ். “இல்ல சார்! கூட்டம்.. அதனாலதான்…” என்று இழுத்தான் அந்த சிற்றுண்டி விற்பவன்.

லூயிஸை கட்டுப்படுத்த சுற்றி இருந்தோர் முனைந்தனர். கூச்சல் சப்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தாள் பொம்மை விற்கும் சிறுமி. அவள் கால் கீழ் ஒரு புத்தகம் இருந்தது. வெகு நேரம் கழித்து லூயிஸ் சாந்தமாய் அமர்ந்தார். அச்சிறுமி அவள் கால் கீழ் கிடந்த லூயிஸின் புத்தகத்தை எடுத்து அவரின் கைகளில் கொடுத்தாள். கோபமான முகத்துடன் அப்புத்தகத்தை வாங்கிக் கொண்டார். மூக்கு கண்ணாடியினை துடைத்து இட்டு, அப்புத்தகத்தின் முகப்பு அட்டையினைப் பார்த்தார். அதில் ‘அமைதி எங்கே… கடவுள் அங்கே!’ என்று எழுதியிருந்தது. வாயடைத்துப் போனார் லூயிஸ்.