![]() |
Author: ஜெ. கமலநாதன்
|
மனஉறுதி என்பதுதான் எல்லா வெற்றிகளுக்கும் அடிப்படைக்காரணி ஆகும். எடுத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றால் அந்தச் செயலில் மன உறுதி காட்டவேண்டும். மனுறுதியோடு செயலில் நிகழ்த்தி உள்ளார்கள். மன உறுதி அற்றவர்கள் செயலைத் தொடரும் உற்சாகம் இல்லாமல் போய் பாதியிலேயே கைவிட்டு விடுகிறார்கள்.
இந்த மன உறுதி எதனால் ஏற்படுகிறது? தொடர்ந்து மன உறுதியை கைக்கொள்வதும், காப்பாற்றிக்கொள்வதும், ஆற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?
முதலில், மிகச்சிறிய விஷயங்களில் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் ஒரு சிறிய ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் தொடங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் அதனை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?
காலையில் 6 மணிக்கு எழுந்து பல்துலக்க வேண்டும். ‘என்னய்யா இது, காலையில் 6 மணிக்கு எழுந்து பல்துக்குவதற்கும் ஒர்க்கஷாப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும் என்ன சம்பந்தம்?’ என்கிறார்களா? இருக்கிறது. இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
இதுவரை, ஒருநாள் 5 மணிக்கும் ஒருநாள் 7 மணிக்கும் ஒருநாள் 8 மணிக்ககும் எழுந்திருக்கக் கூடியவராக அவர் இருந்திருக்கலாம். இனி ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பபவராக அவர் மாற வேண்டும். காலைத் தூக்கத்தைப்போல் சுகமானது ஏதும் இல்லை. இன்னும் ஒரு அரைமணிநேரம் தூக்கம் போட்டால் என்ன கெட்டுப் போகப் போகிறது?’ என்ற ஆசை எல்லோருக்கும் ஏற்படுவதுதான். ஆனால் 9 மணிக்கு ஒர்க்ஷாப்பைத் தொடங்கி பணிகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் உள்ள அவர் காலை 6 மணிக்கு எழுந்து பல்துலக்கி காலைக் கடமைகளை ஆரம்பித்தலை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த ஒரு சிறிய மாற்றம் பல அருமையான மாற்றங்களுக்கும் தொடக்கங்களுக்கும் வழி வகுக்கும். தினத்தாள் படிப்பது, குளிப்பது, ஆடை அணிவது, பிரார்த்தனையில் ஈடுபடுவது எல்லாமே தொடர்ந்து நேரப்படி நடக்கும். 9 மணிகு ‘ஒர்க் ஷாப்பில்’ அவர் இருப்பார்.
இது ஒரு சின்ன விஷயத்தில் மன உறுதி காட்டுவது ஆகும. இது பல, தொடர்ந்த, சின்ன விஷயங்களை உறுதிப்படுத்தும். அடுத்து, ஒரு வாடிக்கையாளர் ஒரு வண்டியை சரிசெய்ய வருகிறார் என்றால் அவரிடம் புன்சிரிப்போடு பேசுவது என்பதை வழக்கம் ஆக்கிக்கொள்ள வேண்டும். நமக்குள் எத்தகைய மனத்துன்பம் இருந்தாலும், நிறைய வேலைச் சுமைகள் நம் மீது அழுத்திக்கொண்டிருந்தாலும், அவற்றை சற்றே மறந்து அல்லது மறைத்து வருகின்றவரிடம் “வாங்க சார்! வாங்க! எங்க ரொம்ப நாளாக்க் காணோம்? வீட்டிலே எல்லோரும் சுகந்தானே!” என்று சிரித்துப் பேசுதலை வழக்கமாகவும் பழக்கமாகவும் ஆக்குதலில் மன உறுதி காட்ட வேண்டும். இது வாடிக்கையாளர் நல்லுறைவை மேம்படுத்தி உங்கள் ‘ஒர்க் ஹாப்ன்’ செயல் பாட்டை வணிக்க் கூறுபாடுகளை மேம்பாடு அடையச்செய்யும் வருகின்ற வாடிக்கையாளர் மகிழ்ச்சி அடைந்து தொடர்ந்து அங்கே வர இது பெரிதும் உதவும். இது மிகப் பெரிய வியாபார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அடுத்து மதிய உணவை பகல் 1 மணிக்கு அல்லது 2 மணிக்கு என்று குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ‘இது ஒரு பெரிய பிரச்னையா? ஒருநாள் 3 மணிக்கு சாப்பிட்டால் என்ன? குடி முழுகிப் போய்விடுமா?’ என்கிறீர்களா. இல்லை குடி முழுகாது. ஒர்க் ஷாப் முழுகிவிடும். ஆம். உங்கள் மதிய உணவு நேரப் பழக்கம் கொஞ்ச நாட்களில் வாடிக்கையாளருக்குத் தெரிந்துபோய் அந்த நேரத்தை தவிர்த்து உங்களைப் பார்க்கவர அவர் திட்டமிட்டுக் கொள்ள வசதி ஏற்படும். வாடிக்கையாளர் வசதிதானே உங்கள் ‘ஒர்க் ஷாப்பின்’ வெற்றி! எனவே இந்த மூன்று விஷயங்களில் நீங்கள் மன உறுதி காட்டினால் மிகப் பெரிய மாற்றத்தை உங்கள் தொழிலில் கொண்டுவர முடியும். இந்த மாற்றம் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
‘உழைப்பும் ஒழுங்கும் உன்னதமானவை. இறைவனுக்கு மிகவும் பிடித்தமானவை. சோம்பல் சாத்தானுக்கு இஷ்டமானது. உழைப்பால் உலகம் உயருகின்றது. உழைக்கும் வர்க்கம், உண்டு உறங்கும் வர்க்கம் என்ற இரண்டு வர்க்கங்கள் இருப்பது ஒரு நாட்டுக்கு நன்மை பயக்காது. உழைக்காமல் உண்பவன் திருடனே! உழைப்பிலும் அதிலும் ஓர் ஒழுங்கிலும் ஈடுபாடு காட்டுபவன் சிறந்த தேசபக்தனாக போற்றப்பட வேண்டியவன் ஆகிறான்’ என்கிறார் அண்ணல் மகாத்மா காந்தி அடிகள்.
காலையில் 6 மணிக்கு எழுந்து பல் துலக்குவது, வருகின்ற வாடிக்கையாளரிடம் புன் சிரிப்போடு பேசுவது, மதிய உணவை குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்வது என்று மூன்று சிறிய விஷயங்களில் மன உறுதி காட்டுவது என்பது தொழிலில் மிகப்பெரிய வெற்றியை அடைய வழிவகுக்கும்.
பள்ளிகளில் படிக்கின்ற மாணவன் இதேபோல காலை எழுதல், குறித்த நேரத்தில் உணவு உண்ணுதல், குறித்த நேரத்தில் பாடங்களைப் படித்தல் என்று சிறிய விஷயங்களில் மன உறுதி காட்டினால், பெரிய வெற்றிகளை சாதிக்க இயலும்.
சரி, மன உறுதியை ஒரு குறிப்பிட்ட செயலில் காட்டுவது எங்ஙனம்?’ என்ற கேள்வி, எழுகின்றது. அது வேறு ஒன்றும் இல்லை. ஒரு செயலை பழக்கப்படுத்திக் கொள்வதுதான். தீய செயல்களை பழக்கப்படுத்திக்கொள்வது எளிது. வெற்றிலை பாக்கு போடுவது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது இவற்றில் ஆர்வம் காட்டினால் அவை நமது தினசரி அட்டவணையில் எளிதில் இடம் பிடித்துவிடும். ஆகவேதான் புரட்சிக்கவி பாரதிதாசன்.
“வழக்கம் என்பதில்
ஒழுக்கம் இல்லையேல்
கழுத்து போயினும்
கைக்கொளல் வேண்டாம்…”
என்கிறார். காலை 8 மணிக்கு எழுதலை பழக்கப்படுத்திக கொள்ளல் எளிது. காலை 5 மணிக்கு எழுதலை பழக்கப்படுத்திக் கொள்ளல் சற்றே கடினமானது. ஆனால் முடியாதது அல்ல. எனவே இத்தகைய நல்ல மாற்றங்களுக்கு மன உறுதி அவசியமானது. நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது அல்லவா? வெற்றிச் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்ற வேகம் இருக்கின்றது அல்லவா? அப்படி என்றால் இதுபோன்ற நடைமுறை செய்பாடுகளில் மன உறுதி காட்ட வேண்டும்.
ஒரு செயலை பழக்கமாக்க முற்படும்போது நமது மனக்குசுக்குள் சிறைபட்டுக்கிடக்கின்ற சில எண்ணங்களே தடைகளாக மாறி நமக்கு இயலாமையை ஏற்படுத்தும். அதில் முக்கிய எண்ண எதிரி ‘என்னால் முடியாது’ என்ற வரிதான். இவனை அப்புறப்படுத்த வேண்டும என்றால் ‘என்னால் இயலும்’ என்ற இரண்டு சொல் நண்பனை மனக்குகைக்குள் அனுப்ப வேண்டும். இரண்டுக்கும் நடுவே யுத்தம்தான். எது ஜெயிக்கிறதோ அதன்படி வாழ்க்கை அமையும். அடுத்த எண்ணம் அச்சம். இது ‘என்னால் இயலுமா?’ என்ற எண்ணத்தை உருவாக்கி நமக்கு பின்னடைவை ஏற்டுத்துகிறது. இதை முறியடிக்க என்னால் இயலும்’ என்ற வரிகொண்ட எண்ணத்தை மீண்டும் அனுப்ப வேண்டும். முதலில் இயலாது என்ற இடத்தில் அடிக்கோடு. இப்போது என்னால் என்ற இடத்தில் அடிகோடு. தாழ்வு மனப்பான்மையின் பல்வேறு வடிவங்கள் இவை. ‘இயலாது’ என்பவன் ‘யாராலும் இதை நிகழ்த்த இயலாது’ என்று ஒட்டுமொத்த சமூகத்தின் மேலும் தாழ்வு மனப்பான்மை கொண்டவன். இன்னொருவன் என்னால் இயலாது’ எறு கூறி தன்மீது தான் கொண்டிருக்கிற தாழ்வு மனப்பான்மையை நிரூப்பிப்பவன். மனித சக்தியின் மீதே நம்பிக்கை இல்லாதவன். இது யாராலுமே முடியாதுப்பா! என்கிறான். தன்மீது நம்பிக்கை இல்லாதவன் ‘இது என்னால ஆகாதுப்பா’ என்கிறான். ஆக, இதன் அடிப்படை காரணம் மனதில் ஏற்டும், இதைச் செய்ய இயலுமா?’ என்ற அச்ச உணர்வு தான். இதை விரட்டிவிட்டால் ‘இயலும்’ என்கிற தன்னம்பிக்கை இதயத்தில் பிறக்கிறது. இது செயலை முடிப்பதற்குரிய ஊக்கத்தை நமக்கு தருகின்றது. பிறகு எந்த கடினமாக செயலும் எளிதானதாகி விடுகிறது.
“கருத்த மேகங்களிலிருந்துதான் வெள்ளி மழைச்சாரல் விழுகின்றது. வறுமை, துன்பங்களின் போதுதான் நம்பிக்கை நமக்குள் மழை பொழிய வைக்கின்றது” என்கிறார் நிஜாமி என்ற ஆங்கிலக்கவி.
“தைர்யமாக இரு; வலிமை வாய்ந்த சக்திகள் உனக்கு தாமே துணைக்குவரும்” என்பது பேசில்கிங் என்ற அறிஞர் கருத்து.
“Be Bold; Mighty forces will come to your aid” என்பதுவே அக்கூற்று.
“எப்படித்தான் அப்படி ஒரு பலம் எனக்கு வந்ததுன்னே தெரியலை; ஒரே ஓட்டமா ஓடி தம் பிடிச்சு வேகம் எடுத்து வெற்றிமுனையைத் தொட்டுட்டேன்” என்பார்கள் சில ஓட்டப் பந்தய வீரர்கள். அதுபோல வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பு உங்களிடம் இருந்தால் குதிரைப்படை, யானைப்படை, காலாட் படைபோல நமக்கு தேவைப்படும் பண உதவியும், செயல் உதவியும், ஊக்க உதவியும் பல்வேறு மனிதர்களிடமிருந்து தானே வரும். நமக்குள் நம்பிக்கையை விதைத்து அச்சத்தை விரட்டி ஊக்கபடுத்தும் இந்த பைபிள் வாசகத்தை எப்போதும் நினைவில் வையுங்கள்;
“Underneath are the everlasting arms” இந்த வரி நமக்கு யானை பலத்தைத் தரும்; வெற்றி தானே வரும்!







Hello sir,
Thanks for ur giving for this article. I like this article. This article is for me.
Very nice sir.
Thanks sir.
Tks & regds
Nethaji.A
9965110110
thanks for u