![]() |
Author: எஸ்.கே.எம். மயிலானந்தன்
|
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது 95-வது வயதிலும் மனிதகுலம் அமைதியாக நிறைவாக, அன்போடு ஒருவருக்கொருவர் ஒத்தும், உதவியும் வாழ வேண்டுமென்ற நோக்கத்திலே அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். தனிமனித அமைதியே, உலக அமைதிக்கு அச்சாணி என்ற பெரு நோக்கத்தில், தனி மனிதனிடத்திலே அமைதிக்கான கல்வியையும், பயிற்சி முறைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அடைய வேண்டிய பெரு இலட்சியம் நிலைத்த, நீடித்த அமைதிதான் என்று அனைத்து ஞானிகளும் கூறியிருக்கிறார்கள். இந்த நிலைத்த, நீடித்த அமைதியே முழுமைப்பேறு, முக்தி, விடுதலை, வீடுபேறு என்று பல வார்த்தைகளாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.
மனவளக்கலை என்ற பெயரிலே ஒவ்வொரு வருக்கும் மனதை வளப்படுத்துகின்ற கல்வி, போதனையாகவும், சாதனையாகவும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மனம் எப்படியோ அப்படித்தான் அம்மனிதனும் இருப்பான். மனம் எப்பொழுது செயல்படுகிறதோ அப்பொழுதுதான் மனிதனும் செயல்படுகிறான்.
நம்முடைய வாழ்க்கையை நடத்துவது மனம் தான் என்று அடிக்கடி கூறுவார்கள். அகத்தை ஒட்டியே புறவாழ்வு அமைகிறது. நிகழ்காலத்தில் ஒருவன் எந்த நிலையில் இருக்கிறானோ, அதாவது வாழ்க்கையில் இன்பமாக, துன்பமாக, இலாபமாக, நஷ்டமாக அனைத்தும் அவனது மனதிலிருந்தே தோன்றுகிறது.
அது மட்டுமல்ல, இன்று அதாவது நிகழ்காலத்தில் அவன் எவ்வாறெல்லாம் பேசுகிறான், செயல்படுகிறான் என்பதும் மனதிலிருந்தே தோன்றுகிறது. மேலும் எதிர்காலத்தில் அவன் எத்தகைய வாழ்க்கை வாழ்வான், எவ்வாறு செயல்படுவான் என்பதும் அவனுடைய மனதிலிருந்துதான் உற்பத்தியாகும். இக்கருத்தை அருட்தந்ததை அவர்கள் கூறி வருகிறார்கள். பல ஞானிகளும் சொல்லி யிருக்கிறார்கள். ஆக, நம்முடைய உடலையும் வாழ்க்கையும் இயக்குவது நம் மனம்தான்.
மனிதனின் தரம் அவனது மனதின் தரத்தைப் பெறுத்து கணிக்கப்படுகிறது. இப்படி மனம் நம்முடைய வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்றால் அத்தகைய மனதைப் பற்றி பெரும்பாலோர் கவனிப்பதில்லை. இத்தகைய சிறப்பு களையும், பெருமைகளையும் கொண்ட நமது வாழ்க்கை வெற்றிகரமாகவும், இன்ப மாகவும் அடைய வேண்டுமென்றால், நாம் நமது மனதை சீர்திருத்தம் செய்து கொள்வதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. எண்ணங்களின் தொகுப்பாக இருப்பதே மனம் என்று சொல்லப் படுகிறது. அத்தகைய மனம் எப்பொழுதும் புறத்திலே அலை பாய்ந்து கொண்டிருக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.
முதலில் முறையான தியானப் பயிற்சியின் மூலம் மனதின் இயல்பான அலை பாயும் தன்மை படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. மனம் சதா புலன்களைப் பற்றியும், புலன் களினால் பெறப் படுகின்ற இன்பங்களைப் பற்றியும் பொருளை, புகழை, அதிகாரத்தை குறித்தும் ஆரம்ப நிலையில் அலைந்து கொண்டிருக்கும்.
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கொடுக்கும் (குண்டலினி தியானத்தின் மூலமாக உயிரிலிருந்து எழுகின்றமனதை, உயிரிலேயே லயித்து, உள்முகமாக திருப்பப்படுகிறது. அதனால் மனம் சிந்திக்கும் ஆற்றலை, விவேகத்தை, சக்தியைப் பெறுகிறது. மனதிற்கு போதிய கூர்மையும், வலிவும் ஏற்படுகிறது. அதன் பிறகு மனத்தூய்மை பயிற்சிகளை மேற் கொள்ளலாம். ஆனால், இப்பயிற்சிகளில் வெற்றிபெற்று, மனம் தூய்மை அடைய வேண்டுமானால் வாழ்க்கையில் சில ஒழுக்க நெறிகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது.
புறத்தூய்மை, அகத்தூய்மைக்கு சிறந்த சாதனமாக சொல்லப்படுகிறது. எளிமை யானதும், அனைவராலும் கடைப்பிடிக்க இயன்றதுமான சில புறத்தூய்மைகளைப் பற்றி ஞானிகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளலாம்.
1. உடல் தூய்மையாக இருக்க வேண்டும் அதாவது, உடலில் அழுக்குகள் இன்றி, தினமும் இரு வேளை குளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
2. நாம் அணியும் உடை தூய்மைகயாக இருக்க வேண்டும். உடையில் அழுக்குகள் இன்றி, நன்கு துவைத்து அணிய வேண்டும்.
3. சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். அதாவது, நாம் வசிக்கும் அறை, சமையல் அறை, குளியல் அறை, படுக்கை விரிப்புகள் போன்றவைகள் அழுக்குகள் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும்.
4. உணவு தூய்மையானதாக இருக்க வேண்டும். அதாவது, குற்றமற்றஉணவு என்பது சைவ உணவையே குறிக்கிறது. சுத்தமாகவும், அவ்வப்பொழுது தயார் செய்யும் உணவையே உட்கொள்ள வேண்டும். உணவு, மன உணர்வுகளுக்கு முக்கியப் பங்கை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது.
5. பேச்சிலே தூய்மை இருக்க வேண்டும். அதாவது, உண்மையே பேச வேண்டும். நல்லதைப் பேச வேண்டும். மென்மை யாகப் பேச வேண்டும். அளவோடு பேச வேண்டும். பேசாமல் இருந்து பழக வேண்டும். இது ஒரு முக்கியப் பயிற்சியாக சொல்லப்பட்டிருக்கிறது.
6. எண்ணத்தால் பேச்சால், செயலால் பிறருக்கு துன்பம் கொடுக்காமல் இருக்க வேண்டும். பிறருக்கு சொந்தமான பொருளின் மீது எக்காரணம் கொண்டும் விருப்பம் கொள்ளக்கூடாது, தன் உடலைக்கொண்டு, அறிவைக் கொண்டு, உழைத்து, நேர்மையாக வாழ வேண்டும். வாழ்க்கை தர்மத்திற்கு உட்பட்டதாகவும், அறவாழ்வாகவும் அமைய வேண்டும்.
இத்தகைய எளிய புறத்தூய்மைகளை கடைப்பிடிப்பது, அகத்தூய்மைக்கு வழிவகுக்கும்.
- தொடரும்…
- None Found







its good